சென்னை

பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்குப் பணம் கேட்டவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நகரை அடுத்த உத்தண்டி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து மாணிக்கம். இவர் பாரதிய ஜனதா கட்சியில் தென் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.  இவர் கடந்த 20 ஆம் தேதி துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள பாஜக மண்டல தலைவர் ஜெகநாதன் வீட்டில் அமர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றியது தொடர்பாகக் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அங்கு வந்த பாஜக ஓபிசி அணி மண்டலத் தலைவர் டிக்காராம், 195 வார்டு தலைவர் வெங்கட், தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் (நெசவாளர் அணி) மாரியம்மாள் உள்ளிட்ட சிலர் பூத் ஏஜென்ட் வேலை செய்ததற்கான பணம் ஏன் கொடுக்கவில்லை? எனக் கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

முத்து மாணிக்கம் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர் டிக்காராம், வெங்கட், மாரியம்மாள் உட்பட 8 பேர் மீது ஆபாசமாக பேசுதல், சட்ட விரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், பொருட்களைச் சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாஜக நிர்வாகி வாசு, ஜெயக்குமார் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள டிக்காராம், வெங்கட், மாரியம்மாள் உள்ளிட்ட சிலரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.