சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழக அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இது அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் 2.75 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
நடப்பாண்டில் தீபாவளி வரும் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சார்பில் தீபாவளி போனஸ் வழங்குவது வழக்கமாகும். அதன்படி, மத்தியஅரசு ஏற்கனவே ரயில்வே உள்பட பல பணிகளுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தீபாவளி போனஸ் அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூபாய் 8 ஆயிரத்து 400 அதிகபட்சம் ரூபாய் 16 ஆயிரத்து 800 போனசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் 2.75 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெற உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு கருணைத் தொகையாக மட்டும் ரூபாய் 369 கோடி வழங்கப்பட உள்ளது.
பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி போனசான 20 சதவீதம் 8.33 சதவீதம் போனசாகவும், 11.67 சதவீதம் கருணைத்தொகையாகவும் வழங்கப்பட உள்ளது. நிறுவனங்களுக்கான உபரித்தொகையை கணக்கில் கொண்டு இந்த மிகை ஊதியமும், கருணைத் தொகையும் வழங்கப்படுகிறது.
மின்துறையில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்கப்பட உள்ளது.
வீட்டு வசதி வாரிய சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்பட உள்ளது.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் கருணைத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசின் இந்த போனஸ் அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேசமயம், கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான போனஸ் குறித்த அறிவிப்பு தனியே வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.