சென்னை: தமிழகத்தில் குறைந்து வந்த தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் சென்னையில் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், எந்தவொரு மண்டலங்களிலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் (Containment zone) இல்லாத நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது அரசு அறிவித்துள்ள அதிகஅளவிலான தளர்வுகள் காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
சென்னையில், ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, தொற்று பரவல் 2.7 சதவீதம் மீண்டும் அதிகரித்து உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 6,19,996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 1,72,773 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 3,274 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது, 12,283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த வாரம் சென்னையில் தொற்று பாதிப்பு 0.5 சதவிகிதமாக உயர்ந்த நிலையில், தற்போது, மேலும் பாதிப்பு அதிகரித்து, 2.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துஉள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட பகுதிகள் 10 ஆக உயர்ந்துள்ளது.
ஆலந்தூர் மண்டலத்தில் 4 இடங்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 3 இடங்களும், சோளிங்க நல்லூர் மண்டலத்தில் 2 இடங்களும், வளசரவாக்கத்தில் ஒரு பகுதியும் கண்டெயின்மென்ட் ஷோன் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் சில மண்டலங்களில் பாதிப்பும் உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக திருவொற்றியூர் மண்டலத்தில் 9.6 சதவீதமும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 5.7 சதவீதமும், மாதவரம் மண்டலத்தில் 5.4 சதவீதமும், ஆலந்தூர் மண்டலத்தில் 5.3 சதவீதமும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 4.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அம்பத்தூர் மண்டலத்தில் 3.8 சதவீதமும், அடையாறில் 3.5 சதவீதம், தேனாம்பேட்டையில் 3.1 சதவீதம், கோடம்பாக்கம் 2.7 சதவீதம், அண்ணாநகரில் 1.8 சதவீதமும், மணலியில் 1.3 சதவீதமும், ராயபுரத்தில் 0.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அதேவேளையில், பெருங்குடியில் 0.5 சதவீதமும், வளசரவாக்கத்தில் 0.9 சதவீதமும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 1.1 சதவீதமும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
இவ்வாறு மாநகராட்சி தெரிவித்து உள்ளது.