வழக்கமாக மெரினாவில் தான் காலை வாக்கிங் என்றாலும் ஸ்ஷெலாக நண்பர்கள் திட்டமிட்டு திருவான்மியூர் பீச் வருவதுண்டு. நேற்று இரவே, பத்திரிகையாளர் சுந்தரம், “ராமண்ணா.. காலையில அஞ்சு மணிக்கு திருவாண்மியூர் பீச் வந்துடு. கதிரவன், சுகன் எல்லோருக்கும் நான் தகவல் சொல்லிட்டேன்” என்று அலைபேசினார்.
சில வருடங்களுக்கு முன்பு வரைகூட திருவான்மியூர் பீச்சில் ஈ காக்கா இருக்காது. ஆனால் இப்போது வாக்கிங் வர காலையிலேயே ஒரு கூட்டம் இருக்கிறது. ஆனால் மெரினாபோல் அத்தனை சந்தடி கிடையாது.
நேரம் குறித்துவைத்து கூடுவோம். பிறகு, ஆளுக்கொரு அருகம்புல் ஜூஸ். பிறகு ஒருமணி நேர நடை. அப்புறம் ஹாய்யாக கொஞ்சம் அரட்டை.
இன்றைய அரட்டையின் போது, கட்சி மாறுவது, கொள்கை, கூட்டணி… என்று பேச்சு திரும்பியது. அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்த பத்திரிகையாளர் சுந்தரம், “ரெண்டும் ரெண்டும் நாலுங்கிறது பள்ளிக்கூட கணக்கு. ரெண்ணும் ரெண்டும் சைபராகவும் ஆகலாம், அல்லது இருபத்திரெண்டாக்கூட ஆகலாம் என்பது அரசியல் கணக்கு. அரசியலில் கொள்கை, கூட்டணி என்பதெல்லாம் சும்மா. ஓட்டு வாங்கணும் என்பது மட்டும்தான் குறிக்கோள். வெற்றியைத் தவிர இங்கே வேறு எதுவும் முக்கியமில்லை” என்று சொல்லி நிறுத்தியவர், “இதை நான் சொல்லலை.. மிகப் பிரபலமாக திகழ்ந்த அரசியல் தலைவர் ஒருவரே சொல்லியிருக்கிறார்.. யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்” என்று சஸ்பென்ஸ் வைத்தார்.
“என்னது.. அரசியல்தலைவரே இப்படி ஓப்பனா சொல்லியிருக்காரா.. அப்படின்னா நல்ல மனிதர்தான்..” என்று ஆச்சரியத்துடன் சொன்னார் கதிரவன். ஆனால் சரியான விடை யாருக்கும் தெரியவில்லை.
சுகன் “வாழப்பாடி ராமமூர்த்தி. முன்பு சாவி வார இதழுக்கு அளித்த பேட்டியில்தான் இப்படிச் சொன்னார்!” என்றார் புன்னகைத்தபடியே. “ஆஹா.. அரசியலை மட்டுமல்ல.. அரசியல் பேட்டிகளையும் கூர்ந்து கவனிக்கிறீர்கள்” என்று சுகனுக்கு சுந்தரம் பாராட்டு பத்திரம் வாசித்தார்.
“வாழப்பாடியாரிடம் இன்னொரு ஆச்சரியமும் இருக்கிறது. இப்படி அரசியல் கணக்கை பட்டவர்த்தனமாகச் சொன்னவர்தான், காவிரி பிரச்சினைக்காக மத்திய அமைச்சர் பதவியை துச்சமென மதித்து ராஜினாமா செய்தார்” என்று கூடுதல் தகவலையும் சொன்னார் சுகன்.
கதிரவன், “மதிக்க வேண்டிய மனிதர் அவர். ஏனென்றால் அரசியல் என்பதே பதவிக்காக என்று ஆகிவிட்டது. தன் மக்களுக்கு.. அதாவது பொது மக்களுக்கு என்ன நடந்தாலும் பதவியை விட்டு விலகமாட்டேன் என்கிற அரசில்வாதிகளுக்கு மத்தியில் இப்படி பொதுப் பிரச்சினைக்காக பதவி விலகியவரை கொண்டாடத்தான் வேண்டும்” என்றார்.
மணலை தட்டிவிட்டபடியே அனைவரும் எழுந்தோம்