சண்டிகர்
பஞ்சாபில் நேற்று முதல் தொடங்கிய 18-44 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி முகாம்களால் 2.19 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெற உள்ளனர்
நாடெங்கும் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி மே மாதம் 1 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தடுப்பூசி மருந்து பற்றாக்குறையால் இந்த பணி பல மாநிலங்களில் தொடங்கப்படவில்லை. இதற்கான முன்னேற்பாடுகள் எதையும் மத்திய பாஜக அரசு செய்யவில்லை என்பதால் இந்த பணி தள்ளிப் போகின்றது
இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு தானே முன் வந்து மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்களை நேற்று முதல் தொடங்கி உள்ளது. இந்த முறை 18-44 வயதானவர்களுக்குத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த முகாம்கள் பஞ்சாபில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் நேற்று முதல்; இயங்கி வருகின்றன. இதற்காக பஞாப் அரசு 30 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்ட் மருந்தைக் கொள்முதல் செய்துள்ளது.
மக்கள் தொகையில் கொரோனா பாதிப்பு அதிக சதவிகிதம் உள்ள பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நேற்று தொடங்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக லூதியானா, அம்ரிதசரஸ், குர்தாஸ்பூர், ஜலந்தர், ஹோஷியார்பூர், பாட்டியாலா, ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதைத் தவிர சங்க்ருர், கபர்தலா, ஃபரித்கோர், பதிண்டா மற்றும் பதான்கோட் நகரங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளன.
பஞ்சாப் மாநில தொழிலாளர் நலத்துறை தலைமைச் செயலர் வி கே ஜாஞ்சுவா கட்டுமான தொழிலாளர்களுக்கு இம்முறை கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது மாநிலத்தில் 2.94 லட்சம் பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 2.19 லட்சம் பேர் 18-44 வயதுப் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் தற்போது பயன்பெற உள்ளதாக ஜாஞ்சுவா தெரிவித்துள்ளார்.