பூந்தமல்லி: சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி தலைமையகத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில், 26 வருடங்களுக்கு பிறகு, தற்போது வழக்கில் தொடர்புடைய 3 பேரை விடுதலை செய்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது. அதுபோல மற்றொரு வெடிகுண்டு வழக்கிலும் குற்றவாளிகளை நீதிபதி விடுவித்து உள்ளார்.
இந்த வழக்கில், காஜா நிஜாமுதீன் (மற்ற பெயர்கள்: உமர், குட்டியப்பா), ஜாகிர் உசேன் (மற்ற பெயர்கள்: இஸ்மாயில், ஹனஸ், உஸ்மான் அலி), ராஜா உசேன் என்ற சைபுல்லா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் 26 ஆண்டு காலமாக இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில், குற்றவாளிகள் என கூறப்பட்ட மூன்று பேருக்கும் விடுதலை அளித்து, பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் இன்று தீர்ப்பு வழங்கினார்.
இந்துமுன்னணி அலுவலக வெடிகுண்டு வழக்கு விவரம்:
தமிழ்நாட்டின் முதல்வராக மறைந்த ஜெயலலிதா பதவியில் இருந்த காலக்கட்டமான 1995ம் ஆண்டு, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டு அன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு வைக்கப்பட்ட பையை, முஸ்தபா ரசாதிக் என்பவர் வைத்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் குண்டு வெடிக்காததால், முஸ்தபா ரசாதிக் அங்கு மீண்டும் சென்று வெடிகுண்டு வைத்த பையை எடுக்கும்போது, அங்குள்ளவர்களால் பிடிக்கப்பட்டார். அவர்களிடம் இருந்து தப்பிய ரசாதிக், தன்னிடம் உள்ள துப்பாக்கியை காட்டி மிரட்டிய நிலையில், வெடிகுண்டையும் வெடிக்கச் செய்தால். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். இந்த குண்டுவெடிப்பில், இந்து முன்னணி அலுவலகத்தின் முன்பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. அப்போது, அலுவலகத்தினுள் இருந்த, இந்து முன்னணிப் பிரமுகர் பைபிள் சண்முகம் பலியானார். மேலும் 3 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.
இதுதொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்தனர். இந்த வெடிகுண்டு வழக்கு தொடர்பாக முஸ்தபா ரசாதிக் உள்பட பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் முஸ்தபா ரசாதிக் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், அபுபக்கர் சித்திக் என்பதை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல்துறை அறிவித்தது. காஜா நிஜாமுதீன், ஜாகிர் உசேன், ராஜா உசேன் என்ற சைபுல்லா ஆகிய 3 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 26 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில், அரசுத் தரப்பில் 75 சாட்சிகள், 177 ஆவணங்கள், 39 சான்று பொருள்கள் தாக்கல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட காஜா நிஜாமுதீன், ஜாகீர் உசேன், ராஜா உசேன் ஆகியோர் மீதான விசாரணை மட்டும் நடைபெற்று வந்தது.
சுமார் 16 வருட கால தாமதத்திற்குப் பிறகு, கடந்த 2011ம் ஆண்டு எழும்பூர் 14வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பிறகு வழக்கு பூந்தமல்லியில் உள்ள குண்டுவெடிப்பு வழக்குகளின் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நூற்றுக்கணக்கான வாய்தாக்களால் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், 26 வருடங்களுக்கு பிறகு, குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 3 பேரையும் விடுதலைர செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதி பி வேல்முருகன், அரசுத் தரப்பால், வாதங்களை நிரூபிக்க முடியவில்லை என்று கூறி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஜா நிஜாமுதீன், ஜாஹிர் உசேன் மற்றும் ராஜா உசேன் ஆகிய 3 பேரையும் விடுவிப்பதாக கூறி உள்ளனர்.
இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கருத்து, மூத்த வழக்கறிஞர், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்பற்றிய காலதாமத யுக்தியால் வழக்கின் நடவடிக்கைகள் தாமதமாகின. குற்றம் சாட்டப்பட்ட மூவரும் மெலிதான காரணங்களுக்காக, வழக்கறிஞர்களை நியமிக்காமல் மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்க முயன்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், நீதிபதி என அனைத்து தரப்பினரும் அவ்வப்போது மாற்றப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வேறுவிதமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதேபோல, வெடிகுண்டு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கிலும், அவர்களை அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 2012ஆம் ஆண்டு பல்லாவரம் – பம்மல் சாலை சந்திப்புப் பகுதியில் உதயாஸ் என்பவரைப் பிடித்து காவல் துறையினர் விசாரித்தபோது வெடிகுண்டுகள் வைத்திருந்தார். மேலும் இவர்கள் வெடிகுண்டுகளை வெடிக்கவைப்பது போன்ற காணொலி காட்சிகள் சிக்கின. இதில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இதில் உதயாஸ் என்ற உதயசங்கர், சேரா என்ற சுரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி என்ற மூர்த்தி, மகேஸ்வரன் என்ற கோபி ஆகிய நான்கு பேரையும் விடுதலை செய்து நீதிபதி அறிவித்தார்.
இந்த வழக்கில் இரண்டு பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.