
1980-களில் கொடிகட்டிப் பறந்த தென்னக திரையுலக நட்சத்திரங்கள் கடந்த பல வருடங்களாக ஒவ்வொரு வருடமும், ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி, பேசி மகிழ்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக இந்த ஆண்டும் ஒன்று கூடினர். மகாபலிபுரம் கடற்கரையை ஒட்டியுள்ள இண்டர் காண்டினண்ட்டல் ரெசார்ட்ஸில் இந்த ஒன்று கூடல் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் எல்லோருமே, ஊதா நிற உடை அணிந்திருந்தார்கள். தவிர அந்த இடம் முழுவதும் ஊதா நிற பூக்கள் உள்ளிட்ட கலை பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
வழக்கமான ஒரு நாள் நிகழ்வுக்குப் பதிலாக இந்த வருடம் இரண்டு நாட்களுக்கு சந்திப்பு நீண்டது.
இரவு ஏழு மணிக்கு நிகழ்விடத்துக்கு ஒவ்வொருவரா, வரத் துவங்கினர். நடிகை சுஹாசினி, லிசி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு, நடிகர் ராஜ்குமார் சேதுபதி ஆகியோர் அனைவரையும் உபசரித்தனர்.
இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத்குமார், சுரேஷ், ஜாக்கி ஷெராப், கே.பாக்யராஜ், ராஜ்குமார், அர்ஜூன், நரேஷ், பானுசந்தர், சுமன், ரகுமான், சுஹாசினி, குஷ்பூ, அம்பிகா, ராதிகா சரத்குமார், ராதா, ஜெயசுதா, பூனம் தில்லான், பூர்ணிமா பாக்யராஜ், ரம்யா கிருஷ்ணன், பார்வதி ஜெயராம், சுமலதா, லிசி, ரேவதி, மேனகா, ஷோபனா, நதியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிறகு பிரபலங்கள் 28 பேரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக 1960 மற்றும் 1970-களில் வெளிவந்து பிரபலமான இந்தி மெல்லிசைப் பாடல்களை நடிகர்கள் ரேவதி, குஷ்பு, சுரேஷ், ரம்யா, சுமலதா, நரேஷ், ராதிகா, சரத்குமார் ஆகியோர் பாடினர். இவர்களில் ரேவதி மற்றும் குஷ்புவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அடுத்து ராம்ப் வாக் நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி தலைமையிலான ஆண்கள் அணி வெற்றி பெற்றது. பாடகர் ஸ்ரீராம் திரைப்பாடல்களைப் பாடினார்.
அந்த பாடலின் நிகழ்வுகளை பிரபலங்கள் நினைவு கூர்ந்தனர்.
இரண்டாவது நாளில், ஆன்மீகம் மற்றும் தத்துவம் குறித்து நட்சத்திரங்கள் விவாதித்தனர்.
பிறகு அனைவரும் விடைபெற்றனர்.