சென்ட்ரல் விஸ்டா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை மே 28 ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த தன்னிச்சையான அறிவிப்பிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தவிர, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
மோடி பிரதமராக பொறுப்பேற்றபின் நாட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்கும் அவர் ஒருவரே காரணம் என்ற ரீதியில் பாஜக அரசு செயல்பட்டு வரும் நிலையில் முதல் முறையாக எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு கூட்டறிக்கை வெளியிட்டிருப்பது பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசியல் ரீதியாக சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எதிர்கட்சிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் :
“குடியரசுத் தலைவர் இந்தியாவின் முதல் குடிமகன் மட்டுமல்ல பாராளுமன்றத்தின் இரு அவைகளின் அசைக்க முடியாத அங்கமாகவும் உள்ளார்.
பாஜக அரசு பதவியேற்றது முதல் பல்வேறு ஜனநாயக படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா விவகாரத்தில் அதன் உச்சகட்டமாக குடியரசு தலைவருக்கு உரிய மரியாதையை வழங்காமல் புறக்கணித்துள்ளது.
இதன் மூலம் ஜனநாயகத்தின் மீது படுபயங்கர தாக்குதலை பாஜக மேற்கொண்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.