சென்னை: தலைநகர் சென்னையில் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பந்தமாக ஜனவரி 1ந்தேதி முதல் இதுவரையிலான கடந்த இரு மாதத்தில் மட்டும் 189 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது. போதை மாத்திரைகள், கஞ்சா போன்ற போதை பொருட்கள் உபயோகிக்கும் பழக்கங்கள்,  பள்ளி, கல்லூரி மாணாக்கர்களிடையேயும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கும், மாநில அரசுக்கும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

அதன்படி, ‘போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவோர், இதன் பின்னணியில் இருப்போரின் தொடர் சங்கிலியை அறுக்க வேண்டும். வெளி மாநிலங்களுக்கு சென்று போதை பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய வேண்டும்’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, சென்னையிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை கும்பலை அடியோடு ஒழிக்க போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு, நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார். இதில் ஏராளமான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுது. .‘

அதில், மெத்தம்பெட்டமைன், ஆம்பெட்டமைன் போதை மாத்திரைகள், ஆசிஷ் கஞ்சா எண்ணெய் விற்பனை அமோகமாக நடப்பது  தெரிய வந்தது. இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை பகுதியில்  நடத்திய சோதனையில், மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இதன் பின்னணி குறித்து விசாரித்ததில்,ஆந்திரா மாநிலம் ஓங்கோலில் இருந்து போதை பொருள் தயாரித்து, சென்னைக்கு கடத்தப்படுவது தெரியவந்தது. இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். போதை பொருட் விற்பனை செய்ததாக,  செங்குன்றத்தைச் சேர்ந்த விஜயகுமார்,37; அழகுராஜா,34 ஆகியோரை, போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 1.25 கிலோ கஞ்சா, 10 கிலோ ஆசிஷ் எண்ணெயை கைப்பற்றினர். அதுபோல போடம்பாக்கம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்த தேனி மாவட்டதைச் சேர்ந்த கோகுலன், விருதுநகர் மாவட்டத்தைச்சேர்ந்த முத்துபாண்டி, ,23, சென்னை அசோக் நகர் கிஷோர்,23.கே.கே.நகர் கிஷோர் குமார்,20, கொத்தவால்சாவடியைச் சேர்ந்த பூங்குன்றன், 26, பூந்தமல்லி ராஜலட்சுமி, 22 ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 7,125 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஆந்திரா, டில்லி, நேபாளம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தெரியவந்துள்ளது. இதுபற்றி அம்மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். போதை பொருள் கடத்தல் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

மேலும், ஜனவரி 1ந்தேதியில் இருந்து இதுவரையிலான கடந்த 2 மாதத்தில் மட்டும்,  போதை பொருள் விற்பனைக்கு எதிராக, 109 வழக்குகள் பதிவு செய்து, 189 பேரை கைது செய்துள்ளோம். 581 கிலோ கஞ்சா, 10 கிலோ ஆசிஷ், 10.964 கிலோ மெத்தம்பெட்டமைன், ஆம்பெட்டமைன், எபிட்ரின் போன்ற போதை பொருள் மற்றும் 8,672 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது, இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.-