சென்னை: சென்னையில் தீபாவளி பாதுகாப்புக்கு பணியில் 18,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், தி.நகரில் காமிரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.நாடு முழுவதும் அக்டோபர் 24ஆம் தேதி, தீபாவளி பண்டிகையை கொண்டாடப்பட உள்ளது. இதையட்டி, சென்னையில், வியாபார ஸ்தலங்களான தி.நகர், பாண்டி பஜார், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்பட சந்தை பகுதிகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதன் காரணமாக வெளிமாநில திருடர்கள் சென்னையில் புகுந்து திருட்டு, பிக்பாக்கெட் அடிக்கும் சம்பவங்களும் அரங்கேறும். மேலும்  மக்கள் அதிகம் கூடும் தி.நகர் உள்பட பல இடங்களில் பதினாறு தற்காலிக பாதுகாப்பு கோபுரங்கள்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் மேல் இருந்து காவலர்கள் பைனாகுலர் மூலமாக சுழற்சி முறையில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தியாகராய நகர் பகுதியில் ஆறு இடங்களில் கேமராக்கள் பொருத்தி அதன் மூலம் நடப்பு நிகழ்ச்சிகளை பேஸ் ரெகக்னிசன் தொழில்நுட்பம் மூலமாக கண்காணிக்க தயார் படுத்தியுள்ளன. இதன் மூலமாக பழைய குற்றவாளிகள் கூட்டத்தில் இருந்தால் உடனடியாக கண்டுபிடிக்கும் புதிய முறை கையாளப்படுகிறது. அதுபோல தியாகராய நகர் பகுதியில் நான்கு இடங்களில் 11 தற்காலிக கட்டுப்பாடு அறைகள் அமைத்துள்ளன. இதில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர். மொத்தமாக , சென்னையில் மட்டும் 18ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.