சென்னை: ஓ.எம்.ஆர் – ஈசிஆர் சாலைகளை இணைக்க ரூ.180 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு வருவதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) தெரிவித்து உள்ளது.

பழைய மாமல்லபுரம் சாலை எனப்படும் ஓஎம்ஆர் சாலையையும், இசிஆர் சாலை எனப்படும், கிழக்கு கடற்கரை சாலையை இணைக்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே இந்த இரண்டு சாலைகளையும் இணைக்கும் வகையில் 6 பாலங்களை கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி  முடிவு செய்து அறிவித்தது. அதன்படி, இளங்கோ நகர் – வெங்கடேசபுரம், வெங்கடேசபுரம் – காந்தி சாலை, வீரமணி சாலை – மணியம்மை சாலை, மணியம்மை சாலை – அம்பேத்கர் சாலை, அண்ணா நகர் – பாண்டியன் சாலை, காந்தி நகர் – பல்லவன் சாலை ஆகிய 6 இடங்களில் ரூ.30 கோடியில் பாலம் கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.  ஆனால், பின்னர் நிதிநிலை காரணமாக, அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, ஓ.எம்.ஆர் – ஈசிஆர் சாலைகளை இணைப்பதற்கான நடவடிக்கை குறித்து,  சிஎம்டிஏ ஆய்வு மேற்கொண்டு வருகிறது.  இரு சாலைகளுக்கும் இடையே உள்ள பகுதிகளான கண்ணகிநகர் – ஈச்சம்பாக்கம் இடையே சாலைகளை அகலப்படுத்தியும், அங்கு செல்லும்  பக்கிங்ஹாம் கால்வாய் மீது  மேம்பாலம் அமைக்கவும்,  இதற்கான மதிப்பு ரூ.180 கோடியாகும் என திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை எல் அண்ட் டி நிறுவனதுக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த இணைப்பு சாலை நடைமுறைப்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால், ஓஎம்ஆர் சாலையில் இருந்து எளிதாக இசிஆர் சாலையை அடைய முடியும். அதாவது 30-45 நிமிடங்களுக்குள் வாகனங்கள் பயணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தற்போது ஓஎம்ஆரில் இருந்து சோழிங்கநல்லூர் சென்று இசிஆர் சாலையை அடைய வேண்டியது உள்ளது. இதற்கு குறைந்த பட்சம் 1மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம்  ஆகும் நிலையில், இணைப்பு சாலை அமைக்கப்பட்டால், அது பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.