ஐதராபாத்
வங்கி ஊழியர் கவனக் குறைவால் 84 வயது முதியவர் பாதுகாப்பு பெட்டக அறையில் 18 மணி நேரம் பூட்டி வைக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத் நகரின் ஜூப்ளிஹில்ஸ் பகுதியில் சாலை எண் 67-ல் யூனியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நேற்று முன் தினம் மாலை சரியாக 4.20 மணிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த வியாபாரியான கிருஷ்ணா ரெட்டி (84) என்பவர் சென்றார். அவர் வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையில் முக்கிய ஆவணங்களை வைக்க வேண்டுமெனக் கூறியதால், வங்கியின் ஊழியர் அவரை பெட்டக அறைக்கு அழைத்துச் சென்று, வெளியில் காத்திருந்தார்.
பிறகு கவனக் குறைவால் கிருஷ்ணா ரெட்டி பாதுகாப்பு அறையில் இருப்பதையே மறந்து வங்கி பணிகளில் ஈடுபட்டார். மாலை நேரமானதும் வங்கியைப் பூட்டி விட்டு அனைத்து ஊழியர்களும் சென்று விட்டனர். அப்போது பாதுகாப்பு பெட்டக அறையும் பூட்டப்பட்டு விட்டது. இதனை அறியாத கிருஷ்ணா ரெட்டி ஊழியர் வருவார் என அங்கேயே காத்திருந்துள்ளார்.
தமது செல்போன் கொண்டு வர மறந்ததால் அவர் வேறு வழியின்றி காற்று கூட இல்லாத அந்த பெட்டக அறையில் அடைந்து கிடந்தார். கிருஷ்ணா ரெட்டி வங்கியில் இருந்து வீடு திரும்பாத காரணத்தால், அவரது வீட்டார் பல இடங்களில் இவரைத் தேடி விட்டு, இறுதியாகத் திங்கட்கிழமை இரவு ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
நேற்று காலை காவல்துறையினர் கிருஷ்ணா ரெட்டி சென்ற வங்கிக்குச் சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பரிசீலித்தனர். பதிவில் கிருஷ்ணா ரெட்டி வங்கிக்கு வந்தது மட்டும் பதிவாகி இருந்ததே தவிரத் திரும்பிப் போனது பதிவாக வில்லை. எனவே அவர் வங்கியிலேயே இருக்க வேண்டுமென காவல்துறை முடிவு செய்து பாதுகாப்பு பெட்டக அறையைத் திறந்து ஆய்வு செய்தனர்.
அங்கு கிருஷ்ணா ரெட்டி மயங்கி விழுந்து கிடந்ததைக் கண்டு உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் 18 மணிநேரம் வரை காற்று இல்லாத இடத்தில் தனிமையில் இருந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
ஜூப்ளி ஹில்ஸ் காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.