சென்னை: கொரோனா தளர்வுகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருவதால், சென்னை மாநகரில் வசிக்கும் பெரும்பாலானோர் மெட்ரோ ரயில் பயணத்தையே விரும்பி வருகின்றனர். அதன்படி, கடந்த ஜூலை மாதம் 18 லட்சத்து 46 ஆயிரத்து 466 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடைப்பிடிக்கப்பட்ட பொதுமுடக்கத்தில் தமிழக அரசு தளர்வுகள் அறவித்ததைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த ஜூன் 21-ம் தேதி முதல் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் மீண்டும் தொடங்கியது. அதன்படி, ஜூன் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் மொத்தம் 3 லட்சத்து 55 ஆயிரத்து 579 பேர் பயணம் செய்துள்ளனர்.
கடந்த மாதம் வரையில் மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 45 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் 18 லட்சத்து 46 ஆயிரத்து 466 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 26-ம் தேதி அதிகபட்சமாக 74 ஆயிரத்து 380 பேர் பயணம் செய்துள்ளனர்.
க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 30 ஆயிரத்து 160 பேரும் பயண அட்டை பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 10 லட்சத்து 6 ஆயிரத்து 615 பேர் ஜூலை மாதத்தில் பயணம் செய்துள்ளனர்.
க்யூஆர் பயணச்சீட்டு முறை மற்றும் பயண அட்டையை பயன்படுத்துவோருக்கும் 20 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயில்கள், ரயில் நிலையங்களில் தொடர்ந்து கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முகக்கவசம் அணியாமல் வருவோரிடம் ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, 102 பயணிகளிடமிருந்து ரூ.20 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிப்படுக்கின்றனர். தனிமனித இடைவெளியை பின்பற்றி செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.