டில்லி:
வெள்ள சேதம் காரணமாக தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கான தடை 18-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பெய்த கன மழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு மாநிலத்தின் பல பகுதிகள் பாதிப்படைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மிகுந்த துயரத்துடன் மக்கள் வேறிடம் செல்வதும் நடந்து வருகிறது. அதே நேரம் பல்வேறு இடங்களில் இருந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் வாகனங்களில் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஆகவே, தமிழகம் முழுதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடி மையங்களில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து 11-ந் தேதி வரை கட்டணம் வசூலிப்பதை நிறுத்திவைக்க மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கடந்த 3-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.
நேற்றுடன் இந்த உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில், வரும் 18ம் தேதி வரை சுங்க கட்டண தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை மத்திய போக்கு வரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் வெளியிட்டார்.