சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நேரில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், முதல் கட்டமாக மருத்துவ மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று கூறினார். அதுபோல வரும் 17ந்தேதி போலியோ தடுப்பூசி குழந்தைகளுக்கு போடப்படும் என்றும் கூறினார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தமிழகம் வந்துள்ளார். இன்று காலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தடுப்பூசி ஒத்திகை பணியை பார்வையிட்டார். தொடர்ந்து, தமிழக அமைச்சர், சுகாதாரத்துறை செயலர் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கும், பெரியமேட்டில் உள்ள பொது மருத்துவ பொருட்கள் சேமிப்பு கிடங்கையும், அதைத்தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள தடுப்பு மருந்து மையத்தையும் பார்வையிடுகிறார். இன்று பிற்பகலில் தமிழக முதல்வர் பழனிசாமியை நேரில் சந்திக்க உள்ளார்.
சென்னை ஜிஎச்சில் கொரோனா தடுப்பூசி சோதனையை ஆய்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பிரதமர் மோடி தலைமையிலான அரசு கரோனோ நோய் தொற்று முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நிலைமை மோசமாக இருந்தது. ஆனால் தற்போது அதிலிருந்து சிறப்பாக மீண்டு வந்துள்ளது. இதற்காக பாடுபட்ட முதலமைச்சர், அமைச்சர்கள், மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வாழ்த்துகள்.
மத்திய , மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இந்தியாவை பொருத்தவரை கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமே 100 விழுக்காடு ஆர்டிபிசிஆர் முறையில் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளபடுகிறது. இது பாராட்டத்தக்கது.
இரவு பகலாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ‘கோவின்’ செயலியில் பதிவு செய்த சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த முதல்கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2ஆம் தேதி நாடு முழுவதும் முதல்கட்டமாக கொரோனோ பரிசோதனை ஒத்திகை நடத்தப்பட்டது. இன்று இரண்டாவது கட்டமாக நாடு முழுவதும் 125க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தடுப்பூசி மருந்து தயாரிப்பிலும் இந்திய சிறப்பாக செயலாற்றி உள்ளது. அடுத்த சில நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. முதல் கட்டமாக மருத்துவ மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். பின்னர் வயது முதிர்ந்தவர்கள், நாள்பட்ட உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் என முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்தியா முழுவதும் ஜனவரி 17ஆம் தேதி தேசிய அளவில் போலியோ தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்துவந்து இரண்டு சொட்டு போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும்.
இவ்வறு அவர் கூறினார்.