டில்லி:
நாடு முழுவதும் 17வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து, வெற்றி தோல்வி கள் அறிக்கப்பட்டுவிட்டன. பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் வரும் 30ந்தேதி மோடி தலைமையில் பாஜக அமைச்சரவை பதவி ஏற்க உள்ளது.
இந்த நிலையில், 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6ந்தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 6 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை சுமார் 10 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்பு உள்ளதாக பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள 16வது நாடாளுமன்ற அவை ஜூன் 3ம் தேதியுடன் முடிவுக்கு வர இருப்பதால் அதற்கு முன்பே பிரதமர் பதவி ஏற்பு விழா மற்றும் புதிய ஆட்சி பொறுப்பேற்றல் ஆகியை நடைபெற்று முடிந்துவிடும். இதன் காரணமாகவே, வரும் 30ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றதும், அதைத் தொடர்ந்து வரும் 31ம் தேதி புதிய மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில், நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
அதன்படி, ஜூன் 6 ம் தேதி 17வது மக்களவை கூட்டத் தொடர் தொடங்கலாம் என கூறப்படுகிறது. அன்றைய தினம் தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு, புதிய எம்பிக்களுக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளின் முதல் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார்.
அதன்பின்னர் ஜூன் 10ம் தேதி மக்களவை புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.