சண்டிகர்: அரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை சேமிப்பு கிடங்கில் இருந்து 1,710 டோஸ் கொரோனா தடுப்பூசி  திருடப்பட்டு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. மேலும், ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தடுப்பு மருந்துகள் திருடப்படுவதும், அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படும் அவலங்களும் அரங்கேறி வருகின்றன.

அரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குளிர்சாதன சேமிப்பு கிடங்கில் தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. . ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் இந்த மருத்துவமனையில் இருந்தே கொரோனா தடுப்பூசிகள் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த  1,710 டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் திருடப்பட்டு உள்ளதாக புகாரளிக்கப்பட்டு உள்ளது.

இன்று அதிகாலை நுழைந்த மர்ம நபர்கள் குளிர்சாதன சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 1,710 கொரோனா தடுப்பூசி டோஸ்களையும் திருடிச்சென்றுள்ளனர். திருடப்பட்ட 1710 டோஸ்களில், 1,270 டோ1 கோவிஷீல்டு மற்றும் 440 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வழக்கமான பணிக்காக வந்த மருத்துவமனை பணியாளர் சேமிப்பு கிடங்கின் கதவுகள் திறக்கப்பட்டு தடுப்பூசிகள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் உயர் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தடுப்பூசிகளை திருடிச்சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசிகள் திருடப்பட்டதால் ஜிண்ட் மாவட்டத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.