சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 900 கடைகளுக்கு 17000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும், அனைவருக்கும் கடை வேண்டுமென வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மெரினா கடற்கரையை ஒழுங்குபடுத்தும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெரினா கடற்பரை பகுதியில் ஆயிரக்கணக்கில் கடைகள் அங்கொன்றும், இங்கொன்றும் இருந்தன. மொத்தம் 1,940 கடைகள் செயல்பட்டு வந்தன. இதனால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, கடைகளை ஒழுங்கப்படுத்தவும், அனுமதி இல்லாத இடத்தில் வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றவும, ஸ்மார்ட் வண்டிகள் அமைத்து, கடைகளை ஒதுக்கவும் சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து., கடற்கரை பகுதியில் , சுமார் 900 வண்டிகள் அமைக்க உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தது. அதில், 60 சதவீதம் மெரினா கடற்கரையில் தற்போதுள்ள விற்பனையாளர்களுக்கு ஒதுக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 540 ஸ்மார்ட் வண்டி கடைகள், ஏற்கனவே வியாபாரம் செய்து வருபவர்களுக்கும், 360 கடைகள் புதிதாக வியாபாரம் செய்பவர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது.
இந்த கடைகள், ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி தலைமையில், குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப வினியோகம் செய்யும் பணி, டிசம்பர் 21ந்தேதியில் இருந்து 26ம் தேதி வரை நடைபெற்றது.
அதில், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், விற்பனை கட்டணம், நேரம், மாத வாடகை, பராமரிப்பு, அபராதம் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய இரண்டு வகையான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.
அதில், ஏ – பிரிவு விண்ணப்பம், ஏற்கனவே வியாபாரம் செய்பவர்களுக்கும், பி – பிரிவு புதிதாக வியாபாரம் செய்பவர்கள் என, வகைப்படுத்தப்பட்டது.
ஏ – பிரிவுக்கு, 1,361 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1,345 பேர் சமர்ப்பித்துள்ளனர்.
அதேபோல், பி – பிரிவுக்கு, 16 ஆயிரத்து, 760 பேர் விண்ணப்பங்களை பெற்று, 14 ஆயிரத்து, 841 பேர் சமர்ப்பித்துள்ளனர்.
மொத்தமுள்ள, 16 ஆயிரத்து, 786 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அவைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கடைகள் ஒதுக்குவது தொடர்பான குலுக்கல் தேதி பின் அறிவிக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மெரினா கடற்கரையில் ஏற்கெனவே வியாபாரம் செய்து வந்த அனைத்துவியாபாரிகளுக்கும் கடையை ஒதுக்க வலியுறுத்தி சேப்பாக்கத்தில் நேற்று வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்தனர்.