மாஸ்கோ,
ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட புளுவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு, பொதுமக்களின் உயிரைக் குடித்து வருகிறது. இந்த விளையாட்டு மூலம், விளையாடுபவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் பின்னணியாக செயல்பட்டு வந்த 17 வயது இளம்பெண் ஒருவர் ரஷ்ய காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் சிறுவர், சிறுமிகள் மட்டுமல்லாது இளைஞர்களையும் அடிமைப்படுத்தியுள்ள புளுவேல் எனப்படும், தற்கொலையை தூண்டும் ஆன்லைன் விளையாட்டு காரணமாக இதுவரை சுமார் 3000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவிலும் இந்த விளையாட்டு காரணமாக பலியான உயிர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மதுரையில் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதன் காரணமாக இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க கோரி நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில், இந்த தற்கொலையை தூண்டும் கொடூரமான விளையாட்டை உருவாக்க பின்புல மாக செயல்பட்டு வந்ததாக 17 வயது இளம் பெண் ஒருவரை ரஷ்ய போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புளூவேல் சேலன்ஜ் எனப்படும் இந்த ஆன்லைன் கேமினை 50 நாட்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். இந்த விளையாட்டை விளையாடுப்வர்கள் அந்த கேமில் கொடுக்கப்படும் டாஸ்க்-களுக்கு அடிமையாகி, அந்த கேமில் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கு ஏற்ப தங்களை தாங்களே வருத்திக்கொண்டும், அந்த கேமின் படத்தை தங்களது கைகளில் கொடுமையான முறையில் ரத்தம் சொட்ட சொட்ட வரைந்தும், இறுதியாக தற்கொலை முடிவுக்கும் தள்ளப்படுகிறார்கள்.
இந்த விளையாட்டுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து ரஷ்ய உளவுத் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த உயிர்கொல்லி விளையாட்டுக்கு பின்புலமாக செயல்பட்டு வந்த 17வயதான இளம்பெண் ஒருவரை ரஷ்ய போலீசார் கண்காணித்து, தற்போது கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த இளம்பெண் தன்னை ஆணாக வெளிப்படுத்தி விளையாட்டை விளையாடி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அந்த இளம்பெண் வீட்டை சோதனையிட்ட போலீசார், அங்கு பல்வேறு பயங்கரமான புகைப்படங்கள், புளூ வேல் விளையாட்டை உருவாக்கிய பிலிப் புடெய்கின் வரைபடம் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இந்த கொடூர விளையாட்டு குறித்த விசாரணையில் கிடைக்கபெற்ற தகவல்கள் ரஷ்யா வெளியிட்டு உள்ளது.
அதில், கைது செய்யப்பட்ட இளம்பெண்ணிடம் நடைபெற்ற விசாரணையில், இந்த விளையட்டில், அதில் கூறப்படும் விதிமுறைகளை பின்பற்றாதவர்களை, உங்களையும், உங்கள் குடும்பத்தினரை யும் கொலை செய்வோம் என்று மிரட்டி வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளதன் காரணமாக இந்த விளையாட்டு விரைவில் தடை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த தற்கொலையை தூண்டும் கொடூரமான விளையாட்டை உருவாக்கிய பிலிப் புடெய்கின் என்ற 22வயது இளைஞர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.