திருச்சி: 17வயது பள்ளி மாணவனை கடத்திச்சென்று, தஞ்சை பெரிய கோவிலில்  திருமணம் செய்துகொண்ட ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படத்தி உள்ளது.

திருச்சி அருகே உள்ள துறையூரில் 17 வயது பள்ளி மாணவனை, தனியார் பள்ளியில் பணியாற்றி வந்த  ஆசிரியை கடத்திச் சென்று திருமணம் செய்துமு கொண்டார். கடந்த 5ந்தேதி (மார்ச் 2022)  அன்று துறையூர் அருகே கொட்டையூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்  பள்ளி முடிந்ததும் மாலை வீட்டுக்கு சென்றார். அதன்பின்னர் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரது பெற்றோர் மார்ச் 11ந்தேதி துறையூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

விசாரணையில், அந்த மாணவனுடன், அதே பள்ளியில் பணியாற்றி வந்த  சிக்கத்தம்பூரைச் சேர்ந்த சர்மிளா (26) எம்ஏ, பிஎட், எம்ஃபில்  என்பவர் நெருக்கமாக பழகி வந்தது தெரியவந்தது. அவரும் அன்றுமுதல் மாயமானது தெரிந்தது. இதையடுத்து, அவரது செல்போன் தகவலைக்கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதில், அவர்கள் இருவரும்,  திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, வேளாங்கண்ணி என பல இடங்களில் சுற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இறுதியாக செல்போன் சிக்னல் திருச்சி எடமலைப்பட்டி புதூரை காட்டிய நிலையில், அங்கு சென்ற காவல்துறையினர், மாணவனையும், ஆசிரியையும் கண்டுபிடித்தனர். இருவரும், ஆசிரியை சர்மிளாவின் தோழியான மற்றொரு ஆசிரியை  வீட்டில் தங்கி இருந்தது தெரிந்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவருக்கும்  தஞ்சை பெரிய கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்தது தெரிந்தது. இதையடுத்து துறையூர் காவல்துறை யினர் மாணவனையும் ஆசிரியையும் துறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் காவேரி ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டார்.

17 வயது மாணவனை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக ஆசிரியை சர்மிளாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மாணவனை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.