கோவை: திருப்பூர் அருகே உள்ள பல்லடத்தில் 17 வயது பள்ளி சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளத. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் சம்பவங்கள் மற்றும் போதைபொருள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய காவல்துறை, மீம்ஸ் கிரியேட்டர்களையும், எதிர்க்கட்சியினரையும் கைது செய்வதிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பல்லடத்தில் பள்ளி 17வயதான சிறுமியை ஒரு கும்பல் மிரட்டி கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவத்தன்று, அந்த 17வயது சிறுமி, தான் குடியிருந்து வரும் வீடிடடின் அருகே தனது நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் சிறுமியை மிரட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, இரு சக்கர வாகனத்தில் கடத்திச்சென்றுள்ளனர். பின்னர் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி அருகே ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிக்கு கூட்டிச்சென்று அங்கு சிறுமியை, மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதை தங்களது மொபைலில் புகைப்படமும் எடுத்துள்ளனர்.
பின்னர் அந்த புகைப்படம் மற்றும் வீடியோவை காட்டி, மிரட்டி வந்துள்ளனர். இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் புகைப்படம் மற்றும் வீடியோவை இணைய தளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம், நடந்த சம்பவம் குறித்து அழுதுகொண்டே தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுதொடர்பாக, பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ்குமார்(31), ஜான்சன்(26), மற்றும் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த பார்த்தீபன்(26) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர், நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான ஒரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள, ரமேஷ்குமார் மற்றும் பார்த்திபன் ஏற்கனவே ஒரு பாலியல் குற்றச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.