சென்னை:

னமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்து 17பேர் பலியான சோக சம்பவம் தற்போது ஜாதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

ஒரு சிலரின் கேவலமான பதிவுகள் காரணமாக,  இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட விபத்து, தற்போது ஜாதிய ரீதியிலான  அரசியலாக்கப்பட்ட அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த வவிகாரம், தற்போது காவல்துறையினரின் தடியடிவரை சென்று  வேறு திசை நோக்கிச்பயணித்துக் கொண்டிருக்கிறது.

இது தமிழகத்தின் சாபக்கேடு என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில், கடந்த 3 நாட்களாக தமிழகம்முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்திலும் தொடர் மழை பெய்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மேட்டுப்பாளையத்தில் மட்டும் 180 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை அறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணி அளவில் அந்த கிராமத்தில் ஆறுமுகம் என்பவருடைய வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்ட கருங்கல்லால் ஆன சுற்றுச்சுவர் திடீரென இடிந்து அருகில் இருந்த 4 வீடுகள் மீது விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனால், வீடுகள் இடிந்து விழுந்ததில் வீடுகளுக்குள் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் 17 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். எதிர்பாராதவிதமாக நடைபெற்ற இந்த இயற்கை விபத்து, தற்போது சிலரின் தூண்டுதல் காரணமாக ஜாதிய பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது.

வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தமிழக கவர்னர் பன்வாரிலால், முதலவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.  தமிழக அரசு உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்  அறிவித்து உள்ளது.

இதற்கிடையில், இயக்குனர் ரஞ்சித், அந்த காம்பவுண்டு சுவரை தீண்டாமை சுவர் என்று கொளுத்திப் போட,மேலும் சிலர் இதுபோன்ற ஜாதிய ரீதியிலான பதிவுகளை இட்டு, பிரச்சினையை பெரிதாக்க தற்போது அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த இயற்கை பேரிடரில், சில ஜாதியக் கட்சிகளும் உள்ளே புகுந்து அரசியல் சித்து விளையாட்டை தொடங்கி உள்ளது. அவர்களின் தலைமையில் உயிரிழந்த 17 பேரின் உடலை வாங்க மறுத்து பலியான 17 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். 17 பேரை பலி வாங்கிய காம்பவுண்டு சுவர் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராடி வருகின்றனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், பலியானர்வளின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில், சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மருத்துவமனையை விட்டு வெளியேறச் சொன்னதால்,  காவல்துறையினருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுல்லு ஏற்பட்டு, தடியடை வரை சென்றுள்ளது.

இது தொடர்பாக சிலரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால்  அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருசிலரின் அநாகரிக ஆசைக்கு,  அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது தமிழகத்தின் வாடிக்கையாகி வருகிறது. இயற்கை பேரிடரால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கும் ஜாதி மதச்சாயம் பூசப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், ஜாதி ரீதியிலான வதந்திகளை பரப்புவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது….

இதுபோன்ற பதிவுகள், நிகழ்வுகள் தமிழகத்தின் சாபக்கேடு என்றும் விமர்சிக்கப்பட்டு உள்ளது….