டெல்லி: நாடு முழுவதும் அரசு அனுமதி பெற்று 16,427 தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகள் செயல்படுகின்றன என நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல் தெரிவித்து உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 826 பாதுகாப்பு ஏஜென்சிகள் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளன.
நாடு முழுதும் தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள் எண்ணிக்கை பெருகி உள்ளன. அரசின் காவல்துறையினரின் பாதுகாப்பு அனைவருக்கும் வழங்க முடியாது என்பதால், அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், நிறுவனங்களுக்கு தனியார் செக்யூரிட்டிகள் நியமிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக நாடு முழுவதும் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து வருகின்றன.
செக்யூரிட்டி தொழிலை முறைப்படுத்தும் வகையில், தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள் மற்றும் செக்யூரிட்டிகளுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே விரிவான விதிகளை வெளியிட்டுள்ளது. பொது சொத்துக்கள் பாதுகாக்கப்படுவதுடன், நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், செக்யூரிட்டிகளுக்கு பயிற்சி அளிப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக ராஜ்யசபா உறுப்பினர் விஜயகுமார் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய உள்துறை சார்பில், இணையமைச்சர் நித்யானந்தராய் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், ஜனவரி 28, 2022 நிலவரப்படி இந்தியாவில் 16,427 தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகள் செயல்படுகின்றன என தெரிவித்து உள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2821 செக்யூரிட்டி நிறுவனங்களும், 2வதாக குஜராத்தில் 2203 நிறுவனங்களும், 3வதாக ராஜஸ்தானில் 1228 நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 826 செக்யூரிட்டி நிறுவனங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.