சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும்  அ.தி.மு.க பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், கூட்டணிக் கட்சிகள் குறித்து முடிவெடுக்க இபிஎஸ்சுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

பரபரப்பான  தமிழக அரசியல் சூழ்நிலையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னை வானகரத்தில் உள்ள ஶ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலம் பாதிப்பு காரணமாக கலந்துகொள்ளாத நிலையில், மூத்த உறுப்பினர் கே.பி.முனுசாமி தற்காலிக அவைத்தலைவராக நியமிக்கப்பட்டு, அவரத  தலைமையில்  செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்திற்காக, சுமார் 3,000 பொதுக்குழு உறுப்பினர்களும், 5,000 செயற்குழு உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன் விவரம்வருமாறு:-

  1. 2-5-2025 அன்று நடைபெற்ற கழக செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்த பொதுக்குழு முழு மனதுடன் ஒப்புதல் அளிக்கிறது.
  2. கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  3. கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதலை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்கள் உடன் அனுப்பாத திமுக அரசின் நிர்வாக திறமையற்ற போக்கிற்கு கண்டனம். சேலம், கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் ”பஸ் போர்ட்” அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
  4. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின் போது தொடர் மழை, கனமழை, வெள்ளம், புயல் காற்று போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போதும், இயற்கை பேரிடரை பாதுகாப்பாக எதிர்கொள்ளவும், மக்களை பாதுகாப்பதிலும் ஸ்டாலின் திமுக அரசு தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது.
  5. வாக்குரிமையை நிலைநிறுத்தும் வாக்குப்பதிவு முறையாகவும், சரியாகவும் திகழ வேண்டும் என்பதற்காக சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை கழகம் வரவேற்கிறது.
  6. நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசின் ஆணையை பெற்று நெல் கொள்முதலை முறையாக முழுமையாக செய்து முடிக்க வழிவகை செய்ய வேண்டும்.
  7. அந்நிய முதலீட்டில் ஆமை வேகம், குறையும் முதலீடுகள், இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள், தமிழக இளைஞர்களுக்கு எட்டாக் கனியாக வேலைவாய்ப்புகள். எனவே போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்.
  8. தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து வருவது வேதனை அளிக்கும் நிகழ்வு.
  9. தமிழக மக்களை தொடர்ந்து கடனாளிகள் ஆக்கும் நிர்வாகத் திறனற்ற திமுக ஃபெயிலியர் மாடல் அரசுக்கு கண்டனம்.
  10. சட்டம் ஒழுங்கு சரிந்து கிடக்கிறது. பாதுகாப்பற்ற நிலையில் தமிழகத்தை வைத்திருக்கும் நிர்வாக திறனற்ற போலி திராவிட மாடல் திமுக அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடும் கண்டனம்.
  11. நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துதல், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகள் கிடப்பில் போட்டு அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றும் திமுக அரசுக்கு கண்டனம்.
  12. முதலமைச்சர், குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள் தொடங்கி மதுரை மேயர் ராஜினாமா வரை ஊழல் சாம்ராஜ்யமாக திகழும் திமுக அரசுக்கு கண்டனம்.
  13. பட்டியலினத்தை இழிவு செய்தும், ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதும் திமுக ஆட்சியில் நடந்து கொண்டிருப்பதற்கு கடும் கண்டனம்.
  14. தென்னக நதிகளின் இணைப்பு, கோதாவரி – காவேரி இணைப்பு, ஆனைமலையாறு – பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை தொடர்வதற்கு அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் மிக நீளமான பாலத்தை 1,621 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கழக அரசு கொண்டு வந்த திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா நடத்தும் திமுக அரசுக்கு கண்டனம்.
  15. நீதித்துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
  16. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் செயல்பட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்களை 2026ல் மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் என சூளுரை ஏற்போம்.

இவ்வாறு அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

[youtube-feed feed=1]