உண்மையிலேயே வெட்ககரமான அவமான உணர்வுடன் தான் எழுத வேண்டியிருக்கிறது.. சினிமாதான் தமிழனின் வாழ்க்கை என்று உலகம் முழுவதும் ஆராய்ச்சி செய்கிறார்கள், சினிமாதான் எங்கள் வேதம் என்பதை இந்திய நாடாளுமன்றத்திலேயே நிரூபித்துவிட்டோம். நாங்கள் விசில் அடித்தான் குஞ்சுகள்தான் என்பதை உலகுக்கே அடித்துப் பறை சாற்றியிருக்கிறோம்.
kasmir-1
கால் நூற்றாண்டு சோகம் – காஷ்மீர் மக்கள் அனுபவித்துக்கொண்டிருப்பது.
ஒரு காலத்தில் காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு அமைவது சாத்தியமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. பிரிவினைவாதத்தால் காஷ்மீர் மாநிலம் நார் நாராகக் கிழிக்கப்பட்டிருந்தது. அங்கு அமைதி திரும்ப படாத பாடுபட்டு பிரிவினைவாதிகள் ஒடுக்கப்பட்டு, மக்கள் நம்பிக்கையைப் பெற தேர்தல் நடந்தது. மக்கள் பங்கேற்பின் மூலமே அமைதி நிலைக்கும் என்பதை, மக்கள் தொடர்ந்து அங்கு நிரூபித்து வருகிறார்கள். அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு ஆட்சி செய்கிறது. தற்போது, பாஜக கூட்டணியுடன் பிடிபி ஆட்சி நடக்கிறது. இதுவும் ஒருவகையில், ஜனநாயகத்தின் வெற்றிதான்.
kasmir-4
ஆனால், 26 ஆண்டுகளுக்கு முன்னர் அமல்படுத்தப்பட்ட ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்’ இன்னமும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதன்படி மக்கள் நடமாடும் பகுதிகளில் காய்கறி சந்தைகளில், வீடுகளில், ஏன் பல்கலைக்கழகங்களுக்குள்கூட ராணுவம் புகுந்து கண்மூடித்தனமாகச் சுடுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகத்திடம்கூட அனுமதி பெற வேண்டியதில்லை. மாநில  அரசாலும் இதைத் தடுக்க முடியாது. இவ்வாறு பொது மக்கள் வாழும் பகுதிகளில் ராணுவம் அத்துமீறுவதன் மூலம் எத்தனை பிரிவினைவாதிகளை, பயங்கரவாதிகளைப் பிடித்திருக்கிறார்கள் என்று பார்த்தால் ஒன்றுமில்லை.
kasmir-6
ஆனால், நூற்றுக்கணக்கான அப்பாவிப் பெண்களை ராணுவம் வல்லுறவு செய்துள்ளது; அப்பாவி இளைஞர்களைச் சுட்டுக் கொன்றுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்.
1991 பிப்ரவரியில் குப்வாரா மாவட்டம் குனான் போஷ்போராவில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கர்ப்பிணிகள் உள்ளிட்ட 100 அப்பாவிப் பெண்களை இழுத்து வந்து கிராமத்தினர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி, நமது இந்திய ராணுவம் வல்லுறவுக்கு உட்படுத்தியது.
1993 அக்டோபரில் அனந்த் நாக் மாவட்டம் பிஜ்பெஹ்ரா என்ற இடத்தில் அமைதியாகப் போராட்டம் நடத்தியவர்கள் எல்லைப் பாதுகாப்பு ராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இது குறித்த நீதிமன்ற விசாரணையில் பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல் நிரூபிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டது.
2000 ஏப்ரலில் அனந்த் நாக் மாவட்டம் பத்ரிபாலில் அயல் நாட்டுத் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் 5 இளைஞர்களை அழைத்துச் சென்றனர். அந்த இளைஞர்கள் அப்பாவிகள் என்று கிராமத்தினர் கூறியதை யாரும் காது கொடுத்துக் கேட்கவில்லை. ஆனால், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் இருந்ததால் இது குறித்து எந்த வழக்கும் பதிய முடியவில்லை. ஆனால் மக்கள் போராட்டம் காரணமாக சிபிஐ விசாரணை நடைபெற்றது. அதில் அப்பாவி இளைஞர்களை ஊடுருவல் பயங்கரவாதிகள் என கடத்திச் சென்ற பி.எஸ்.எப் அதிகாரிகளின் குற்றம் நிரூபிக்கப்பட்டது. ஆனால், தவறாக என்கவுண்டர் கொலை செய்யப்பட்ட அந்த 5 இளைஞர்களின் உயிர் திரும்பக் கிடைக்குமா?
kasmir-5
2009 மே மாதத்தில் ஷோபியன் கிராமத்தில் தமது தோட்டத்துக்குச் சென்ற இரண்டு பெண்களைக் காணவில்லை, அவர்களது சிதைக்கப்பட்ட உடல்கள் மட்டுமே அடுத்த நாள் காலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அருகில் முகாமிட்டிருந்த பாதுகாப்புப் படையினர் சிலர் அப்பெண்களைக் கடத்திச் சென்று, வல்லுறவுக்கு ஆட்படுத்திக் கொலை செய்து வீசியுள்ளனர். இக் கொடுமையில் ஈடுபட்ட யாருக்கும் தண்டனை கிடைக்கவில்லை.
பந்திபுரா, பாரமுல்லா, குப்வாரா மற்றும் இதர மாவட்டங்களில் 2008-09 ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 3000 உடல்கள் அடையாளமில்லாமல் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் எவ்வித விசாரணையுமில்லாமல் காக்கை, குருவிகளைப் போல சுட்டுக் கொல்லப்பட்டவர்கள். இந்த அநியாயச் சட்டத்தின் காரணமாகவே கணக்கற்ற அப்பாவி உயிர்கள் பலியாயின; பெண்கள் மான பங்கப் படுத்தப்பட்டனர்.
இதேபோல 2010 ஏப்ரலிலும் பாரமுல்லாவைச் சேர்ந்த மூன்று அப்பாவி இளைஞர்களை குப்வாரா மாவட்ட மச்சில் முகாம் ராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொன்றனர். இதனை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தினை அடக்க மீண்டும் ராணுவம் சுட்டதில், பொதுமக்களில் 110 பேர் கொல்லப்பட்டனர்.
1979 முதல் 2012 வரை காஷ்மீர் மாநிலத்தில் நடந்ததாகப் பதிவு பெற்ற என்கவுன்டர் கொலைகள் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அமைத்த நீதி விசாரணைக்குழு அத்தனை கொலைகளும் போலி என்கவுன்டர் கொலைகள் என்று கண்டுபிடித்தது.
இவை அனைத்துக்கும் மூல காரணம் ஆயுதச் சட்டம்தான். வெறும் சந்தேகம் மட்டுமே போதும், கொலை செய்யலாம்; வல்லுறவு கொள்ளலாம். இச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று காஷ்மீர் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். காஷ்மீரில் மட்டுமல்ல, இந்தச் சட்டம் அமலில் உள்ள மணிப்பூர் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களிலும் அதனை எதிர்த்து மக்கள் தீவிரமாகப் போராடி வருகிறார்கள்.
attack kasmir
ஆனால், இச் சட்டம் விலக்கிக் கொள்ளப்படவில்லை. மாறாக, பொது மக்கள் மீது ஆயுதங்களைப் பிரயோகிக்கும்போது அபாயகரமான குண்டுகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற விதியையும் மீறி பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த முப்பது நாட்களில் மட்டும் காஷ்மீர் மாநிலத்தில் பெல்லட் குண்டுகளால் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் ஆத்திரத்தையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.
மழைக்காலக் கூட்டத்தொடரில் இது குறித்து விவாதிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது, புதனன்று இப்பிரச்சினை மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மாநிலங்களவை காங்கிரஸ் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் இது குறித்து உணர்வுப்பூர்வமாகப் பேசினார்: ஆயுதச் சட்டத்தால் மக்கள் அமைதியாக, இயல்பாக வாழ முடியவில்லை, அரசின் மீதான மக்களின் நம்பிக்கை குலைந்து வருகிறது. பல்லாண்டுகளாக ஆயுதச்சட்டம் நீடிக்க வேண்டிய அவசியமென்ன என்று கேள்வி எழுப்பினார்.
அவர் மட்டுமல்லாமல் இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் காஷ்மீர் மாநிலத்திலும் வட கிழக்கு மாநிலங்களிலும் அப்பாவி மக்கள் வெறும் சந்தேகத்தின் பெயரால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்துப் பேசினார்கள். அரசும்கூட ’உயிர் வாதையை ஏற்படுத்தும் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்த வேண்டாம்’ என்று ராணுவத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாக பதிலளித்தது.
ஆனால், அதிமுக எம்.பி.யும் முன்னாள் அரசு வழக்கறிஞரும் தமிழ்நாடு தேர்வாணையக் குழு முன்னாள் தலைவருமான நவநீதகிருஷ்ணன்,
‘காஷ்மீர்.. பியூட்டிஃபுல் காஷ்மீர்
காஷ்மீர் .. வொண்டர்புல் காஷ்மீர்
kasmir-2
என்று சினிமா பாடலைப் பாடினார். அது அவரது கட்சித்தலைவர் நடித்த படத்தில் பாடிய பாடலாக இருக்கலாம், ஆனால் அந்தப் பாடலுக்கும் நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் காஷ்மீர் பிரச்சனைக்கும் என்ன தொடர்பு? அம்மாநில மக்களின் பிரச்சனைகளுக்கும் வாதைகளுக்கும் யாதொரு தொடர்பும் எங்காவது இருக்கிறதா?
அதுவாவது பரவாயில்லை; அடுத்து பேசினார் பாருங்கள்: ”காஷ்மீர் குங்குமப்பூவைத்தான் தமிழகக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுகிறார்கள். இதனால் குழந்தை அழகாகப் பிறக்கிறது. காஷ்மீர் ரொம்ப அழகாக இருக்கிறது. அம்மா என்னை காஷ்மீருக்கு அனுப்பினார்கள். நன்றாக சுற்றிப் பார்த்தேன். காஷ்மீர் எனக்கு பிடித்திருக்கிறது. காஷ்மீரில் இருந்து வந்த சட்ட அதிகாரிகள், நீதிபதிகளுக்கு சென்னையின் மெரினா பீச், மாமல்லபுரம் கடற்கரையைச் சுற்றிக் காண்பித்தேன். அம்மாவுக்கு நன்றி.”
இதில் எங்கே காஷ்மீர் பிரச்சினை இருக்கிறது? ஆயுதச் சட்டம் பற்றி அதிமுக என்ன நினைக்கிறது? ஆனால் நாங்களெல்லாம் அம்மா புராணம் பாடும் விசில் அடிச்சான் குஞ்சுகள்தான் என்பதை அதிமுக எம்பிகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள்.
இந்த வெட்கக்கேட்டுக்குப் பதிலாக, திமுக போல வாய்மூடி மௌனியாகவே இருந்திருக்கலாம்.