கரூர்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கூண்டோடு திமுகவில் இணைந்து, அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், உச்சநீதிமன்றம் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடத்ந 2019 டிசம்பரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், 2020 ஜனவரியில் பொறுப்பேற்றனர். நகர்புற உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கும் இன்னும் தேர்தல் நடக்கவில்லை. மேலும் பல மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், 10 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை.
தேர்தல் நடக்காத உள்ளாட்சி பதவிகளுக்கு செப்டம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழகஅரசு உள்ளாட்சி மன்ற தனி அதிகாரிகளுடன் பதவிகாலத்தை மேலும் 6 மாதம் நீட்டித்துள்ளது.
இதற்கிடையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பழனிகுமார் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். அவர்மூலம் தேர்தலை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது., ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து, தேர்தல் முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் துவக்க உள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆளும்கட்சியான தி.மு.க., நகர பகுதிகளில் அதிக ஓட்டுக்களை அள்ளியது. எனவே, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை யில், அக்கட்சியும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதன் தொடர் நடவடிக்கையாக திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தையும் கூட்டி விவாதித்து, திமுக நிர்வாகிகள் பணிகளை தொடங்க உத்தரவிட்டு உள்ளது.
அதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினருக்கு வலைவீசப்பட்டு வருகிறது. இதில் கரூர் மாவட்டத்தில் , தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீசிய வலையில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக நிர்வாகிகள் பலர் சிக்கி உள்ளனர்.
‘கரூர் மாவட்ட அதிமுக கடவூர் ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், கடவூர் ஊராட்சி ஒன்றியக் குழுப் பெருந்தலைவர் தேன்மொழி, அதிமுக கடவூர் ஒன்றிய இணைச் செயலாளர் கடவூர் சித்ரா, கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திருக்காடுதுறை ஊராட்சி மன்றத் தலைவர் அசோக்குமார்,, குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த 12 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 16 ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆகியோர் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
இந்நிகழ்வில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவகாமசுந்தரி, கரூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வையில் சேகர், கடவூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சுதாகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அதிமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கூண்டாடு திமுகவில் இணைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.