டில்லி

திரையுலக பிரபலங்களின் வரிசையில் 150 விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து சமத்துவமின்மை, மிரட்டல், பாகுபாடு மற்றும் அநீதிக்கு எதிராக வாக்களியுங்கள் என மோடிக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடிக்கு எதிராக ஏற்கனவே 100 திரையுலக பிரபலங்கள் இணைந்து தேர்தலில் பிரசாரம் செய்து வருகின்றனர்.  மக்களாட்சியை காப்போம் என்னும் அமைப்பின் கீழ் திரையுலக பிரபலங்களான வெற்றிமாறன், ஆனந்த் பட்வர்த்தன்,  சணல்குமார் சசிதரன், உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.  அவர்கள் கூட்டறிக்கை ஒன்றை மோடிக்கு எதிராக இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் 154 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து மோடிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர்.  அமித் ஆப்தே, சோரப் தலால், ரமா கோவிந்தராஜன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் கலந்துக் கொண்டுள்ள இந்த  விஞ்ஞானிகள் அமைப்பு சமத்துவமின்மை, மிரட்டல், பாகுபாடு மற்றும் அநீதி செய்யும் மோடிக்கு எதிராக வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கும்பலாக சேர்ந்து மக்களை கொல்பவர்களை நிராகரியுங்கள்.  மக்களை மதம், சாதி, பாலினம், மொழி மற்றும் வாழும் பகுதியின் மூலம் பிரிக்க நினைப்பவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.   நம்மை பிரித்தாள நினைக்கும் அரசியலை நாம் அனுமதிக்கக் கூடாது.

மோடி அரசு முற்போக்கு சிந்தனையாளர்கள், பகுத்தறிவு வாதிகள் மற்றும் அறிவு ஜீவிகளை தண்டிக்க எண்ணுகிறது.    அதை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.   நமது நாட்டில் பிரிவினையில் ஒற்றுமை என்பதே நமது குடியரசின் பலம் ஆகும்.   அந்த அடிப்படையையே அழிக்க நினைப்பவர்களுக்கு வாக்களிக்க கூடாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் முடிவில் கிழே உள்ள ரவீந்திரநாத் தாகுரின் வரிகளை அவர்கள் பதிந்துள்ளனர்.

எங்கே நமது மனம் பயமின்றி தலை நிமிர்ந்து உள்ளதோ

எங்கே அறிவு சுதந்திரமாக உள்ளதோ

எங்கே உலகம் உடைந்து துண்டாடப்படவில்லையோ

அங்கு குறுகிய எண்ணங்கள் இருக்காது