ஐதராபாத்: துணிவாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட்ட 15 வயது மாணவி, 21 வயது வாலிபருடன் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசிக்கும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, அவளின் பள்ளி இறுதித்தேர்வை முழுதாக எழுதி முடிக்கும் முன்னரே, பெற்றோர்களால் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. ஓட்டுநர் பணிசெய்யும் 21 வயது நபர்தான் மாப்பிள்ளை.
திருமணத்தில் சிறுமிக்கு உடன்பாடு இல்லையென்றாலும், அவளைக் கட்டாயப்படுத்தி திருமண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. திருமண நாளன்று, காலை 11.20 மணிக்கு முகூர்த்த நேரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த சிறுமி காலை 9 மணிக்கு எப்படியோ குழந்தை உதவி எண்ணான (child help line number) 109க்கு தகவல் சொல்லிவிட்டார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அடுத்த 1 மணிநேரத்திற்குள் வந்து சிறுமிக்கு நடக்கவிருந்த கட்டாயத் திருமணத்தை தடுத்து நிறுத்திவிட்டனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர் அச்யுத ராவ், “எங்களுக்கு தகவல் தெரிந்த சிறிதுநேரத்தில், காவல்துறையை உஷார்படுத்தி, திருமணத்தை தடுத்து நிறுத்திவிட்டோம். சிறுமிக்கு படிப்பதில்தான் ஆர்வம். அவளுக்கு திருமணத்தில் சுத்தமாக விருப்பமில்லை” என்றார்.
– மதுரை மாயாண்டி