காட்சிரோலி, மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்வாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 15 பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட 16 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தில் நக்சல்வாதிகள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 11 ஆம் தேதி அன்று இந்த பகுதியில் மக்களவை தொகுதி வாக்குப் பதிவு நடந்தது. அந்த சமயத்தில் ஒரு வாக்குச் சாவடி அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது இதில் யாரும் காயம் அடையவில்லை.
இந்நிலையில் இன்று இந்த பகுதியில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு தாக்குதலை நக்சல்வாதிகள் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் சக்தி வாய்ந்த வெடி குண்டு பயன்படுத்தப் பட்டுள்ளது. குர்கேடா – கோர்ச்சி சலையில் நடந்த இந்த குண்டு வெடிப்பில் ஒரு காவல்துறை வாகனம் வெடித்து நொறுங்கி உள்ளது. இதில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 15 பேர் பதுகாப்பு வீரர்கள் ஆவார்கள்.
இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளர். அவர் தனது டிவிட்டரில், “மகாராஷ்டிர மாநிலம் காட்சிரோலியில் நமது பாதுகாப்பு வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு கண்டம் தெரிவிக்கிறேன். மறைந்த வீரர்களுக்கு என் வணக்கங்கள். இந்த தியாகத்தை என்றும் மறக்க முடியாது. மறைந்த வீரர்களின் குடும்பத்தை எண்ணி நான் கவலை அடைகிறேன். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிந்துள்ளார்.