டில்லி:
பணமதிப்பிழப்பு அறிவிப்பால் 15 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில் ‘‘ பணமதிப்பிழப்பு அறிவிப்பால் நேரடியாக 15 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ளது. நிதித்துறை மீது நடத்தப்பட்ட இந்த அவசர நிலை பிரகடணம் என்பது ஏழைகள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
முதல் ஆண்டில் 1.6 கோடி இந்தியர்கள் வேலை இல்லாதவர்களாக மாறிவிட்டனர் என்று தொழிலாளர் நலத்துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வேலைவாய்ப்பு குறித்த கணக்கெடுப்பை தங்களது அரசு நிறுத்தியிருப்பது ஆச்சர்யமாக உள்ளது. ஏன் நிதிஆயோக் வறுமையை கண்டறியவில்லை. நுகர்வோரின் எண்ணிக்கை ஏன் இல்லை. ஒரு பிரச்னையை ஆராயாமல் எப்படி சரியான தீர்வு காண முடியும்’’ என்று அதில் கேள்வி எழுப்பட்டுள்ளது.
‘‘உற்பத்தி துறை கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக ஏற்றுமதி துறையின் வளர்ச்சி குறைந்துள்ளது. வட்டி உயர்ந்து வரும் வேலையில் முதலீடு அதிகரிக்க தவறிவிட்டது.
விவசாயம் அல்லாத பொருளாதாரத்தில் 2ல் 3 பங்கு ஆதிக்கம் செலுத்தும் கட்டுமான துறையில் வளர்ச்சி இல்லாததால் பலர் வேலை இழந்துள்ளனர். இயற்கையின் சதியால் கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சி காரணமாக விவசாயத்தில் வேலை இழப்பு ஏற்ப்டடுள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்படாததால் விவசாயிகள் பலர் இறந்துள்ளனர். விவசாயிகளுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்தியது மற்றும் பொது முதலீடு குறைவு காரணமாக விவசாயம் பாதித்துள்ளது’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த கடிதத்தில், ‘‘பணமதிப்பிழப்ப மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை காரணமாக பலர் வேலையிழந்து மீண்டும் கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர். இதனால் கிராமங்களில் பெண்கள் ஈடுபட்டிருந்த வேலைகள் பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறைந்தபட்ச ஊதியம் அமல்படுத்துவதன் மீது மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.
இதன் மூலம் தொழிலின் அடக்க விலை அதிகரித்து மேலும் பலர் வேலை இழக்க நேரிடும். கிராமங்களில் சமநிலை வேலை வாய்ப்பு அதிகரித்தால் தான் ஏழை நாடுகள் பட்டியலில் இருந்து முன்னேற முடியும்’’ என்று அதில் குறிப்பிடப்ப்டடுள்ளது.