ஜெர்மன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் போலி ஆவணங்களை சமர்ப்பிப்பதாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் தெரிவித்துள்ளார்.
தகுதியுள்ள மாணவர்கள் மட்டுமே ஜெர்மனி செல்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும், சுமார் 10 முதல் 15 சதவீத விசா விண்ணப்பங்கள் மோசடியானவை என்பதால் அதிகாரிகள் ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று ஜெர்மன் தூதர் பிலிப் ஆக்கர்மேன் பரிந்துரைத்துள்ளார்.
ஜெர்மன் பல்கலைக்கழங்களில் சேர ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் விசாவிற்காக விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில்,
சில முகவர்கள் மாணவர்களை தவறாக வழிநடத்துவதாக ஆக்கர்மேன் கூறியிருப்பது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக சில பல்கலைக்கழகங்களுடன் ஜெர்மன் அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக அவர் கூறினார். மேலும் அவர்கள் நாட்டிற்கான பயணத்தை எளிதாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.
சில கல்வி நிறுவனங்களில் வரவிருக்கும் செமஸ்டருக்கு முன் சில இந்திய மாணவர்களால் சரியான நேரத்தில் விசா பெற முடியாது என்பதை உறுதி செய்த ஜெர்மன் தூதர் “விசா பிரச்சினைகள் குறித்து சில பல்கலைக்கழகங்களுடன் நாங்கள் தொடர்ந்து பேசிவருகிறோம் , அதில் சில பின்னடைவுகள் உள்ளது” என்று கூறினார்.
கொரோனா பரவலுக்குப் பிறகு பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் சென்று படிப்பதற்கான விண்ணப்பம் பலமடங்கு அதிகரித்துள்ளது.
கனடா, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள் மாணவர்களுக்கான விசா கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் திணறி வருகின்றன.
அதேவேளையில், பெரும்பாலான நாடுகள் மாணவர் விசாக்களுக்கு முன்னுரிமை அளித்து உதவி வருகின்றன.
எனினும், “மாணவர்களுக்கான ஜெர்மன் விசா விண்ணப்பம் குறித்த தற்போதைய நிலை திருப்திகரமாக இல்லை” என்று கூறிய ஜெர்மன் தூதர் பிலிப் ஆக்கர்மேன் “விரைவில் இதற்கு சுமூக தீர்வுகாண தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.