சென்னை,

மிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து டெங்கு கொசுவை ஒழித்து, தமிழகத்தில டெங்கு காய்ச்சலை வேரோடு  ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை, சேலம், காஞ்சி, திருவள்ளூர்,  திருப்பூர், கோவை, மதுரை, நெல்லை, நாகை, வேலூர், கிருஷ்ணகிரி  ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலில் ஏற்படும்  உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

நேற்று ஒரே நாளில் மட்டும் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மன்னார்குடி அருகேயுள்ள அரிச்சாபுரம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஆனந்த நாயகி, தஞ்சையில் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

 

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கிராமம் ஒன்றை சேர்ந்த அதிமுக அம்மா பேரவை நிர்வாகியான ராஜேந்திரன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி அருகே அஞ்சூர் கிராமத்தில் தேவிகா என்ற பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சைதாப்பேட்டையை சேர்ந்த இரண்டு வயது ஆண் குழந்தை டெங்கு காய்ச்சலால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் கந்தசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் அதிமுக நிர்வாகி உட்பட மேலும் 4 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தனர்.

இதுபோன்று தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலில் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

டெங்கு நிலைமை கைமீறிப் போய்விட்ட நிலையில் தான், தமிழக அரசு நேற்று  சென்னையில் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணியை தொடங்கி உள்ளது. வாகனங்களில் தெருத்தெருவாக சென்று நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள இந்திய பொது சுகாதார சங்கத்தினர், தமிழகத்தில்  12,500 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.

தமிழகத்தை மிரட்டி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.