பெங்களூரு:
மறைந்த கணவர் நடராஜனின் இறுதி சடங்கில் பங்கேற்க பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் 15 நாள் பரோல் வழங்கியதை தொடர்ந்து, பெங்களூருவில் இருந்து சாலை மார்கமாக தஞ்சை விளார்க்கு புறப்பட்டார்.
சசிகலாவின் கணவரான நடராஜனுக்கு 17-ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக நள்ளிரவு 1.35 மணியளவில் அவர் மரணமடைந்தார்.
இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா நேற்றே தனது கணவரை காண பரோலுக்கு மனு தாக்கல் செய்திருந்தார். அதை சிறைத்துறை நிர்வாகம் மறுத்துவிட்ட நிலையில், நடராஜன் மரணம் அடைந்ததை தொடர்ந்து, கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க15 நாட்கள் பரோல் கேட்டு சசிகலா மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை பரிசீலித்த சிறை நிர்வாகம், முதலில் 10 நாட்கள் பரோல் வழங்கியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி உள்ளது பெங்களூரு சிறை நிர்வாகம். அதைத்தொடர்ந்து மதியம் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா கார்மூலம், நடராஜனின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்துக்கு விரைகிறார்.