சென்னை: தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கத்துக்கான முகாமில், 15.33 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ள தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்து உள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகின்றன. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த அக்.27-ம் தேதி தொடங்கியது. அன்றே வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, அன்று முதலே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான மனுக்கள் பெறப்பட்டன. ஏற்கனவே கடந்த நவ 3-ம் தேதி நிலவரப்படி, நேரிலும் ஆன்லைன் மூலமாகவும் 36,142 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொர்ந்து வார இறுதி நாட்கள் முகாம் 4 நாட்கள் நடைபெற்றது.
அதன்படி, நவ 4,5-ம் தேதிகளில் நடைபெற்ற வாக்காளர் முகாமில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக 4 லட்சத்து 7,100 பெயர் சேர்ப்பதற்காக அளித்த படிவம் உட்பட 6 லட்சத்து 112 பேர் விண்ணப்பித்தனர் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த சனி ஞாயிறு, அதாவது, நவம்பர் 25, 26-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதிலும் பல ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, நவம்பர் 26-ம் தேதி இரவு நிலவரப்படி, பெயர் சேர்க்க 9.13 லட்சம் பேர், பெயர் நீக்கத்துக்கு 1.21 லட்சம் உட்பட 15.33 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.