சென்னை: தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான குறைந்தபட்ச படிப்பு 10ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இன்றுமுதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை உள்ளாட்சித் துறை வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சிச் செயலர் பணி என்பது, கிராம ஊராட்சி மன்றத்தின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது, கிராம ஊராட்சிக்கு வரும் அரசாணைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துவது, கிராம வளர்ச்சித் திட்டங்களை மேற்பார்வையிடுவது போன்ற பொறுப்புகளை உள்ளடக்கியது.
கிராம ஊராட்சி செயலர் பணிக்கு www.tnrd.tn.gov.in தளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் முதல் வாரத்தில் நேர்காணல் நடத்தி, அம்மாத இறுதிக்குள் பணி ஆணை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதியை பொறுத்தவரை 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பிக்க விரும்புவர்கள் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். வரும் நவம்பர் 9-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
வரும் நவம்பர் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். பிறகு டிசம்பர் 3-ந்தேதிக்குள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, டிசம்பர் 4-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆகியோர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்துவர்.
நேர் காணல் முடிவுகள் வரும் டிசம்பர் 16-ந்தேதிக்குள் வெளியிடப்படும்.
இதைத்தொடர்ந்து 17-ந்தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அட்டவணைப்படி, பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளுக்கு இயக்க ஆணையர் பொன்னையா உத்தரவிட்டு உள்ளார்.