சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் தொல்லை கொடுத்து மாணவிகள் புகார் அளிக்க தமிழ்நாடு அரசு உதவி எண்ணை அறிவித்து உள்ளது.

அதன்படி,  பள்ளி, கல்லூரிகளில்  பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் புகார் அளிக்க 14417  என்ற உதவி எண்ணை வெளியிட்டு உள்ளது.  இந்த எண்ணுக்கு புகார் அளிக்குமாறு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல், ஈரோடு பெண்ணுக்கு கொடைக்கானல் ரோடு அருகே ரயிலில் பாலியல் சீண்டல், கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் என இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் இன்று(புதன்கிழமை) முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பள்ளிகளில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டால் 14417 என்ற எண்ணில் உதவி மையத்தை உடனடியாக அழைத்து புகார் அளிக்குமாறு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மனம், உடல் மற்றும் பாலியல் சார்ந்த துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தல்கள் போன்ற பாதுகாப்பற்ற சூழல் நிலவினால் உடனடியாக உதவி மையத்துக்கு அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.