மும்பை

மும்பையில் ஒமிக்ரான் பரவலை தடுக்க வரும் 31 ஆம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டு மற்ற நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.   இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் உள்ளதால் மத்திய மாநில அரசுகள் கடும்  கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.   இந்த வைரஸ் தாக்கம் மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் அதிகமாக காணப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் 32 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதில் மும்பையில் 13 பேரும் புனேவில் 12 பேரும் உஸ்மனாபாத்தில் 2 பேரும் கல்யாண், டோமிபிவிலி, நாக்பூர், லாத்தூர்,வசாய்விரார், புல்தானா பகுதிகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மும்பை நகரில் ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வரும் 31 ஆம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இன்று அதிகாலை 12.01 முதல் பி/பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு வரும் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும்.   ஆகவே அடுத்த 14 நாட்களுக்கு மும்பை நகரில் பொதுக்கூட்டம், பேரணி உள்ளிட்ட எதுவும் நடத்த அனுமதி கிடையாது.

சிறிய நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.  மகாராஷ்டிரா வருபவர்கள் இரு டோஸ் தடுப்பூசி போட்டு கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.   அப்படி இல்லை என்றால் 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த சோதனை சான்றிதழுடன் வர வேண்டும்.   இதைத் தவிர மேலும் பல புதிய வழிகாட்டு முறைகளை மகாராஷ்டிர மாநில அரசு அறிவிக்கலாம் எனக் கூறப்படுகிறது.