சென்னை: தலைநகர் சென்னையில் 144 தடை உத்தரவை ஜூன் 30வரை நீட்டித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 22,333 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 12757 ஆக உள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.அதே நேரத்தில் சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், சென்னையில் 144 உத்தரவை ஜூன் 30வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

கொரோனா நோய் தொற்று பரவும் விதத்தை தடுக்கும் விதமாக, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி சட்டப்பிரிவு (2) தொற்று நோய் சட்டம் மற்றும் ஒழுங்கு முறை 1897-ல் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு எண் CSCR/130-216/2020 பொது துறை 17-5-2020 நாளிட்ட அரசு கடிதத்தின் படி சட்டப் பிரிவு 144 குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 மற்றும் பிரிவு 20( 2 ) குற்றவியல் நடைமுறை சட்டம் ( மத்திய சட்ட பிரிவு (2) 1974 ) – ன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதை தடை செய்யும் ஆணை நீட்டிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.