மதுரை
இன்றும் நாளையும் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மலைமீது காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் தர்காவில் தினசரி ஏராளமானோர் வழிபாடு நடத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக மலைமீதுள்ள தர்காவில் ஆடு மற்றும் கோழியை உயிர்பலி கொடுக்கக் கூடாது என இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருவது அரசியல் விவகாரமாக உருவெடுத்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையை காக்க, நாளை அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அமைப்பு அறிவித்துள்ளது. எனவே அசம்பாவிதங்களோ, மதரீதியான மோதல்களே ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், மதுரை மாவட்ட நிர்வாகம் தற்போது மாநகர் முழுவதும் இரண்டு நாட்களுக்கு 144 ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. ஆயினும், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் தர்காவில் வழிபட தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன்,
“திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சில நாட்களாக இரு வேறு பிரிவினர்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்பட்டநிலையில், அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஐகோர்ட்டு மதுரைக் கிளையிலும் இருபிரிவினர் சார்பில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பு நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அனுமதி மறுத்த விவரம் தெரிந்து வீடியோ, தண்டோரா போட்டு திருப்பரங்குன்றத்திற்கு பொதுமக்களை அதிக அளவில் திரட்டும் செயல்களில் இந்து முன்னணி அமைப்பு ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம். மீறி பங்கேற்போர் மீதும், வாகனங்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்”
என எச்சரித்துள்ளார்.