லக்னோ: உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருகை எதிரொலியாக நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, நொய்டாவில் புதியதாக கொரோனா தடுப்பு அரசு மருத்துவமனை அமைக்கப்பட்டது.
அந்த மருத்துவமனையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் நொய்டாவில் கட்டப்பட்ட கொரோனா தடுப்பு மருத்துவமனையை திறந்து வைக்க நாளை அவர் வருகிறார்.
இதையடுத்து, நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருகை காரணமாக 15 காவல்துறை உயர் அதிகாரிகள், 700 காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக களம் இறக்கப்பட்டு உள்ளனர்.
முதலமைச்சர் வருகையின்போது தேவையின்றி வாகனங்களில் வெளியே வர அனுமதி இல்லை. டிரோன் கேமராக்கள் பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.