சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும்  14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது

 

பொங்கல்பண்டிகையையொட்டி, தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை உள்ளதால்,  நகர்ப்புறங்களில் வசிக்கும் பல லட்சம்பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக  சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. அதுபோல தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே முடிவடைந்து உள்ளது.

இந்த நிலையில்,  பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை ஒட்டி 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக இயக்கப்படும் 8368 பேருந்துகளுடன் கூடுதலாக 5736 பேருந்துகள் இயக்கப் பட உள்ளது.

சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் பிற மாவட்டங்களுக்கு இடையேயும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 15,800 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதற்காக போக்குவரத்து கழகம் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  நடப்பாண்டு,  மொத்தம் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆயிரத்து 104 பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. ஜனவரி 10,11,12,13 ஆகிய நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன .‘

சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம் , மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது .

 கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது  6 லட்சத்து 54 ஆயிரத்து 472 பேர் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக 15 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் 10,460 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 5340 பேருந்துகளும் சேர்த்து 15,800 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 21,904 பேருந்துகள்: ஜன.10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,736 சிறப்பு பேருந்துகளும் என 4 நாட்களுக்கு 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பிற ஊர்களில் இருந்து 4 நாட்களுக்கு 7,800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஒட்டுமொத்தமாக, 21,904 பேருந்துகள் இயக்கப்படும்.

அதேபோல், பொங்கல் பண்டிகை முடிந்து, சென்னை திரும்புவதற்கு வசதியாக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அந்தவகையில் ஜன.15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தினசரி இயங்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மற்ற முக்கிய ஊர்களில் 6,926 பேருந்துகள் என மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்ய வசதியாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்களும் செயல்படும். இதுதவிர, tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பேருந்துகள் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக 9445014436 என்ற தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். கிளாம்பாக்கம் செல்ல, கோயம்பேட்டில் இருந்து 100 பேருந்துகளும், பிராட்வேயில் இருந்து 100 பேருந்துகளும், திருவான்மியூர், பூந்தமல்லியில் இருந்து தலா 50 பேருந்துகள் என 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் 24 மணி நேரமும் செயல்படும்.

ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும். ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று பயணிகள் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.

கார்களில் செல்பவர்கள் சென்னை – திருச்சி சாலையைத் தவிர்த்து, ஒஎம்ஆர் வழியாகவோ, திருபோரூர் – செங்கல்பட்டு வழியாகவோ சென்றால், பேருந்து போக்குவரத்துக்கு நெரிசல் இல்லாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.