டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இருந்து இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்களவையில் 13ந்தேதி அன்று (புதன்கிழமை) பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞா்கள், எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று நாடாளுமன்றம் கூடியதும், நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரையன் இடைநீக்கம் செய்யப்பட்ட அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதுபோல மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டதாக, ஒழுங்கற்ற நடவடிக்கை காரணமாக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். அதன்படி, கனிமொழி, ஜோதிமணி, சு. வெங்கடேசன் மாணிக்கம் தாகூர் மற்றும் பென்னி பெஹனன், வி.கே. ஸ்ரீகந்தன், முகம்மது ஜாவத், பி.ஆர். நடராஜன், கே. சுப்பிரமணியம், எஸ்.ஆர். பிரதீபன் என 14 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 9 பேர் காங்கிரஸ், 2 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 2 பேர் திமுக, ஒருவர் இந்திய கம்யூனிஸ்ட், ஒருவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்
இதையடுத்து தொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து மக்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவை உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.