சென்னை: இன்று மாநிலம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு தொடங்கி உள்ளது. இந்த தேர்வு வாயிலாக சுமார் 3935 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு சுமார் 14லட்சம் பேர் (13,89,738 ) போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாடு அரசின் விஏஓ, வனத்துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்4 தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.

இந்த நிலையில், சென்னையின் பல பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை கண்டுபிடிக்க தேர்வர்கள் கடும் சிரமப்பட்டனர். தேர்வு ஹால்டிக்கெட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் முகவரிகள் சரியான முறையில் இல்லை என பல தேர்வர்கள் குற்றம் சாட்டினர். உதாரணமாக, சென்னை பெரம்பூர் பெரியார் நகர் பகுதியில் உள்ள ரேடியன்ட் ஸ்கூல் வால்மிகி தெருவில் உள்ள நிலையில், தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில் கென்னடி தெரு என கூறப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான மாணவ மாணவிகள் கடும் அவஸ்தை பட்டனர். இதுகுறித்து பள்ளியில் இருந்தவர்களும் முறையான பதில் அளிக்காமல் மவுனம் காத்தனர். இதுபோல பல இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தேர்வர்களுக்கான தேர்வு மையத்தை ஒதுக்கும்போது, அதிகாரிகள், அந்த தேர்வு மையம் அமைந்துள்ள பகுதி குறித்த சரியான முகவரியை பதிவிடுமாறு பெற்றோர்களும் வலியுறுத்தி உள்ளனன்ர.
இந்த தேர்வு மூலம் அரசு துறைகளில் காலியாக மொத்தம் 3935 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த இடங்களுக்கு சுமார் 14 லட்சம் பேர் (அதாவது 13 லட்சத்து 89 ஆயிரத்து 738பேர்) போட்டியில் குதித்துள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் 4,922 தேர்வுக் கூடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன.
இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு முடிவடைகிறது. சுமார் 3மணி நேரம் தேர்வு நடைபெறும். தேர்வர்கள் அதிக பட்சமாக 9 மணிக்குள்ளாக தேர்வு வளாகத்திற்கு வரவேண்டும். அதன் பின் வருபவர்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
தேர்வர்கள் கண்டிப்பாக தங்களுடன் அனுமதிச்சீட்டுடன் (Hall Ticket) மற்றும் ஆதார் அட்டை / கடவுச்சீட்டு (PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD)/ வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், தேர்வர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப்பேனாவை (black ink ball point pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். OMR விடைத்தாள் உபயோகிக்கும் முறை குறித்து அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை கண்டிப்பாகப் பின்பற்றிட வேண்டும் என்றும், ஆள்மாறாட்டம் உட்பட எந்த விதமான தேர்வு முறைகேட்டிலும் ஈடுபடக்கூடாது. மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக வினாத்தொகுப்பு தேர்வர்களுக்கு வழங்கப்பட்டது.. OMR விடைத்தாளில் வினாத்தொகுப்பு எண்ணை எழுதி விடை அளிப்பதற்கு முன், அனைத்து வினாக்களும் வினாத்தொகுப்பில் எவ்வித விடுதல்களுமின்றி அச்சிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொண்டு தேர்வினை எழுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.