நாட்டையே உலுக்கும் அளவுக்கு மீண்டும் ஒரு கூட்டு பலாத்கார குற்றம் அரங்கேறியிருக்கிறது, பெண்மையை தாயாகவும் சகோதரியாகவும் போற்றும் தமிழகத்தில்.
வாணியம்பாடி அருகே உள்ளது மேட்டுப்பாளையம் என்ற கிராமம். அங்குள்ள 13 வயது சிறுமி ஆற்றங்கரை பக்கம் ஒதுங்க சென்றிருக்கிறார்.. அப்போது அங்கு சுடுகாட்டுப் பகுதியில் மூன்று பேர் குடித்துவிட்டு சீட்டாடிக் கொண்டிருப்பதை பார்த்த சிறுமி வேறு பக்கமாக போக பார்த்திருக்கிறார். ஆனால் அந்த மூன்று பேரும் சிறுமியைத் துரத்திப் பிடித்து மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர் பின்னர் உடைந்த பீர் பாட்டிலை காட்டி, சத்தம் போட்டால் குத்திக் கொன்று விடுவோம் என்று மிரட்டி மூவரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
ஆடைகளை அப்படியே விட்டால் சிறுமி வெளியே போய் சொல்லி விடுவாளோ என்று முன்னெச்சரிக்கையில். அவரின் உடைகளை கந்தல் கந்தலாக கிழித்து போட்டு விட்டு ஓடிவிட்டனர் மூவரும்.
ஆடை இல்லாமல் வெளியே வர கூச்சப்பட்ட சிறுமி மானத்தை மறைக்க அங்கே வேறு ஏதாவது கிடைக்குமா என்று தேடி பார்த்திருக்கிறார். சுடுகாட்டில் சடலங்களுக்கு சடங்குகளுக்காக மேலே போர்த்தப்படும் வேட்டி ஒன்று அழுக்கான நிலையில் கிடந்திருக்கிறது. அதை எடுத்து உடலில் போர்த்திக்கொண்டு வீட்டுக்கு ஓடி வந்திருக்கிறார். நடந்த சம்பவங்களை தன் தாயிடம் விவரித்து சிறுமி அழுதிருக்கிறார்.
பதறிப்போன சிறுமியின் தாயார் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு மகளை அழைத்துச் சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
புகாரை வாங்கிய காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி குற்றவாளிகள் அடையாளங்கள் பற்றி சிறுமியிடம் விசாரித்திருக் கிறார்.. அந்த மூவருமே சுடுகாட்டு பகுதியை சேர்ந்தவர்கள்தான் என்று சிறுமி உறுதிப்படுத்த அதன்பேரில் தேடுதல் வேட்டை நடந்திருக்கிறது.
போலீசார் தீவிரதமாக விசாரித்ததில், கூட்டு பலாத்காரம் செயதவர்கள் சந்துரு, பார்த்திபன், கண்ணன் என்ற மூன்று பேர் என தெரியவந்தது- மூவருமே கூலி வேலை செய்பவர்கள். வேலை இல்லாத நேரத்தில் மது அருந்தி விட்டு சுடுகாட்டு பகுதியில் சீட்டு ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளவர்கள்.
தற்போது இந்த மூவரும் போஸ்கோ சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் தனது தந்தையை இழந்து, தாயின் பராமரிப்பில் வளர்ந்து வரும் சிறுமி இவர். குடும்ப சூழல் காரணமாக தனது படிப்பை தொடர முடியாமல் சென்ற ஆண்டு முதல் பள்ளிக்கும் செல்லவதில்லை இவர்.
இன்னமும் எத்தனை சட்டங்கள், சட்டத்திருத்தங்கள் வேண்டுமோ, இது போன்ற சிறுமிகளை பாலியல் வன் கொடுமைகளிலிருந்து பாதுகாக்க.
டாஸ்மாக் மதுபான கடைகளும் ஒழியப்போவதில்லை. இது போன்ற கொடூர குற்றங்களும் குறையப்போவதில்லை.
-லட்சுமி பிரியா