ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் போட்டியிட உள்ள சுயேச்சை வேட்பாளர்களுக்கு 135 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடக்க உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இதுவரை தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இத்வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ள 3 பேரும் ஈரோடு அல்லாத வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இதுவரை ஈரோடு மாவட்டம் அல்லது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு கட்சியின் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். அதை போல் சுயேச்சையாக போட்டியிடுபவர்களுக்காக தேர்தல் ஆணையம் 135 சின்னங்கள் ஒதுக்கி உள்ளது.
அந்த பட்டியலை பார்த்து சுயேச்சை வேட்பாளர்கள் தாங்கள் விரும்பும் 3 சின்னங்களை தேர்வுசெய்து வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும். இவற்றில் ஏதாவது ஒரு சின்னம் ஒதுக்கப்படும். ஒரே சின்னத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்தால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.