திருவனந்தபுரம்

பரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய 133 பெண்கள் முன்பதிவு செய்ததையொட்டி இந்து அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்குப் பின்னர் கடந்த மண்டல காலம் முழுவதும் சபரிமலையில் பெரும் பதட்டம் நிலவியது. சபரிமலை தரிசனத்திற்கு வந்த இளம் பெண்களை இந்து அமைப்பினர் தடுத்ததால் கடும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.

நேற்று இந்து அமைப்புகளின் சீராய்வு மனு மீது நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வழக்கை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதுவரை பெண்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.  இதனால் சபரிமலையில் தரிசனத்திற்காக 133 இளம் பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மனிதி அமைப்பினரும், கடந்த ஆண்டு வந்து தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிய ஆர்வலர் திருப்தி தேசாயும் இந்த ஆண்டும் வர உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு சபரிமலை சென்ற பிந்து அம்மணி, இந்த ஆண்டு சபரிமலை செல்ல உள்ள பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

அதே வேளையில் சபரிமலைக்குப் பெண்கள் வந்தால் தடுப்போம் என்று இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. பா.ஜ, பொதுச் செயலாளர் சுரேந்திரன், ”கடந்த ஆண்டு சபரிமலை விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தவறு இருந்ததாக நீதிமன்றத்திற்குத் தெரிந்ததால் தான் 7 பேர் கொண்ட அமர்வுக்கு விசாரணக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆகவே கேரள அரசு மீண்டும் இளம் பெண்களைக் கொண்டு வந்து பக்தர்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அத்துடன்  இறுதித் தீர்ப்பு வரும் வரை தீர்ப்புக்கு முந்தைய நிலை தொடர வேண்டும். அரசு கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்குத் தடை விதிக்கவில்லை எனக் கூறி தன்னார்வலர்களைச் சபரிமலை அழைத்து வர முயன்றால் பாஜக, கடுமையாக எதிர்க்கும்: எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெண்கள் வருகைக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த ஆண்டும் சபரிமலைக்குப் பெண்கள் வந்தால் கடும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையொட்டி சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை 5 கட்டங்களாக காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இது குறித்து, “இன்று முதல் 30ம் தேதிவரை முதல் கட்டமாக சன்னிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி, பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் 2551 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சமூக தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் என சபரிமலை தொடர்பாக அவதூறு பரப்பக்கூடாது. மீறி அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கேரள டிஜிபி எச்சரித்துள்ளார்.