தராபாத்

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையில் 13,000 ஆர்வலர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகின்  பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, மற்றும் அரேபிய நாடுகளின் வரிசையில் இந்தியாவிலும் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.   முதல் கட்டமாக இதில் துப்புறவு பணியாளர்கள், செவிலியர், மருத்துவர்கள் மற்றும் கொரோனா முன் கட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதற்காக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளுக்கு இந்தியாவில் அவசர பயன்பாட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதில் கோவிஷீல்ட் மருந்து ஆக்ஸ்ஃபோர்ட்  பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவன கண்டுபிடிப்பாகும்.  இந்த மருந்தை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கிறது.  இந்த தடுப்பூசி ஏற்கனவே அனைத்துக் கட்ட சோதனைகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசி அந்நிறுவனத்தின் சொந்த கண்டுபிடிப்பாகும்.   இந்த மருந்து தற்போது மூன்றாம் கட்ட சோதனையின் இறுதிக் கட்டத்தில் உள்ளது.    எனவே இந்த தடுப்பூசியின் திறன் குறித்துத் தெளிவாக தெரியவில்லை.  இதையொட்டி இந்த ஊசி போட்டுக் கொள்வோரிடம் இந்த ஊசி மூன்றாம் கட்ட சோதனையில் இருப்பதை அறிந்தே ஊசி போட்டுக் கொள்வதாக ஒப்புதல் கடிதம் வாங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவன இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா எலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் எங்கள் மருந்தையும் இணைத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்.  கடந்த 7 ஆம் தேதி அன்று நாங்கள் இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைக்காக 25800 ஆர்வலர்களைத் தேர்வு செய்யும் பணி முடிந்தது எனத் தெரிவித்து இருந்தோம்.

தற்போது 13000 ஆர்வலர்களுக்கு இரண்டாம் டோஸ் கோவாக்சின் மருந்து  போடப்பட்டுள்ளது.  இந்த சோதனையில் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த ஆர்வலர்கள் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  எங்களது மருந்தின் முதல் இரு கட்ட சோதனை வெற்றி அடைந்துள்ளதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.  அவ்வகையில் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகளும் விரைவில் வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Patrikai.com, Tamil News, corona, vaccine, Covaxin, 3rd phase test, 13000 volunteers, Bharat bio tech, கொரோனா, தடுப்பூசி, 3ஆம் கட்ட சோதனை, 13000 ஆர்வலர்கள், பாரத் பயோ டெக்,