திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 13000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது சாத்தனூர் அணை, இதன் மொத்த கொள்ளளவு  119 அடி. இந்த அணையில் கடந்த ஃபெஞ்சல் புயலின்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தால் நிரம்பியது. இதையடுத்து இரவு நேரம் அணையின் பாதுகாப்பு கருதி நீரை திறந்து விட்டதால், அதன் வழித்தடதில் இருந்து பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டன.  அதாவது, டிசம்பர் 1-ந்தேதி நள்ளிரவு மற்றும் 2-ந் தேதி அதிகாலை விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டதாக நீர்வளத்துறை தெரிவித்திருந்தது.

இதனால், மக்கள் குடிக்க நீர்கூட கிடைக்காமல் பெரும் சோதனைகளை சந்தித்தனர். அதே நேரத்தில் வெள்ளப்பெருக்கால் தென்பெண்ணை ஆற்றில் ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய அணை அடித்துச்செல்லப்பட்டது. இதுவும் கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்தியது.

பின்னர், மழையின் தாக்கம் குறைந்ததால், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நிலையில், தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக,  சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.40 அடியை எட்டி உள்ளது.

தற்போதைய நிலையில்,  சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,500 கனஅடியில் இருந்து 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று இரவு விநாடிக்கு 10ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் விநாடிக்கு 13,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதையடுத்து,  தென்பெண்ணை ஆற்றுப்பகுதி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது,  அணையில் 7,041 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.  தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும். இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றுப்பகுதி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.