திண்டிவனம்: மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற  லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் கணக்கில் வராத சமார் ரூ.1.30 லட்சம் பணம் மற்றும் ஆவனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்த சார் பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நவம்பர் 10, 11ந்தேதி சுபமுகூர்த்த நாட்களாகும். இதையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் சொத்துக்களை வாங்கவும், விற்கவும் செய்ததால், பத்திர பதிவுக்காக  சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டது. அதே வேளையில், பதிவுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை விட, அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில்,திண்டிவனம் அருகே உள்ள மயிலம் சார் பதிவாளர்   அலுவலகத்தின் அருகே இ.சேவை மையம் வைத்து நடத்தி வரும் ஒருவர் சார் பதிவாளர் அலுவலகத்தின் இடைத்தரகராக பணியாற்றி , பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம், லஞ்சம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. பொது மக்களிடம் லஞ்சப் பணத்தை வாங்கி அவ்வப்போது சார்பதிவாளரிடம்  கொடுத்து வருவதாகவும் புகார்கள்   எழுந்தது.

இதையடுத்து,    மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். | மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீஸார்  மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் சென்று பணியில் இருந்தவர்களை அலுவலகத்திற்குள் அமர வைத்து விட்டு அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்

இந்த சோதனையின்போது,   கணக்கில் வராத ரூ.1.30, 340 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சார் பதிவாளர் வெங்கடேஸ்வரி மற்றும் புரோக்கர் உள்ளிட்ட சார் பதிவு அலுவலக ஊழியர்களிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய கோப்புகளை கைப்பற்றினர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரல் கைப்பற்றப்பட்ட கோப்புகளில் முக்கியமான ஆதாரங்கள் ஏதேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (நவ.8) மயிலம் சார் சார்பதிவாளர் வெங்கடேஸ்வரி உள்ளிட்ட 6 பேர்மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.