பிரேசிலில் ரயில் மீது ஏறி அபாயகரமான ஸ்டண்ட் செய்த 13 வயது சிறுவன் இரண்டு முறை மின்சாரம் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆன்லைன் விளையாட்டுகளைப் பார்த்து சர்ஃபிங் என்று சொல்லப்படும் அபாயகரமான ஸ்டண்ட் செய்வது உலகம் முழுக்க அதிகரித்து வருகிறது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ரயிலின் மேற்கூரை மீது ஏறி 13 வயது சிறுவன் ரயில் சர்ஃபிங் செய்த நிலையில் மின்சாரம் பாய்ந்து ரயிலின் மேற்கூரையில் தொங்கியபடி விழுந்தான்.
நவம்பர் 18ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து அஞ்சியேட்டா ரயில் நிலையத்தில் நின்ற அந்த ரயிலின் மீது ஏறிய மற்றொரு பயணி அசைவற்றுக் கிடந்த அந்த சிறுவனின் உடலை மீட்க முயற்சி செய்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த சிறுவனின் உடல் மீண்டும் மின்சார கம்பியில் பட்டதால் பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த சிறுவனை மீட்கும் முயற்சியைக் கைவிட்டு அந்த பயணி கீழே இறங்கினார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் ரயில்வே நிர்வாகத்தினர் அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆன்லைன் விளையாட்டுகளில் வரும் சாகசங்களைப் பார்த்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2023ம் ஆண்டு இதுபோன்ற ரயில் சர்பிங் சாகசத்தில் ஈடுபட்டு 5 பேர் உயிரிழந்த நிலையில் 118 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய நிகழ்வாக, அக்டோபர் 27 அன்று குயின்ஸில் ரயிலின் கைப்பிடியை பிடிக்காமல் புட்போர்ட் அருகே நின்று பயணித்த 13 வயது சிறுமி தவறிவிழுந்து ரயில் பெட்டிகளுக்கு இடையில் விழுந்து கொல்லப்பட்டார். அவருடன் இருந்த அவரது 12 வயது நண்பரும் ரயிலில் இருந்து தவறி விழுந்து தலையில் காயம் அடைந்தார்.
ரயில்கள் மீது ஏறி சாகசம் செய்வது ஆபத்தான செயல் என்று குறிப்பிட்டுள்ள பிரேசில் தனியார் ரயில் நிறுவனம் “இந்த நடவடிக்கைகள், பொறுப்பற்றவையாக இருப்பதுடன், அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குரியதாக மாற்றுகிறது, தவிர ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாட்டை பாதிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
“பயணிகள் மற்றும் பாதசாரிகள், அனைவரும் ஒத்துழைத்து, பாதுகாப்பு விதிகளை மதித்து, துயரங்களைத் தவிர்ப்பதற்கும், இந்த ஆபத்தான நடைமுறையை ஒழிப்பதற்கும் ஒட்டுமொத்த சமூகமும் அணிதிரள்வது அவசியம்.” என்று அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.